மோடியின் உரையால் அதிருப்தியாளர்கள் குஷி: 3 மாநில பாஜக தலைவர்களுக்கு ஆப்பு? குஜராத் பார்முலாவை பின்பற்ற திட்டம்

புதுடெல்லி: சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற பாஜக கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதற்கு, அம்மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் தான் காரணம். குஜராத் போன்று மற்ற மாநில தலைமைகளும் செயல்பட வேண்டும்’ என்றார். பிரதமரின் இந்த பேச்சு, மாநில அதிருப்தி தலைவர்கள் மத்தியில் நம்பிக்கையைத் தந்துள்ளது. குறிப்பாக விரைவில் சட்டப் பேரவை தேர்தலை எதிர்கொள்ளக் கூடிய மத்திய பிரதேசம், திரிபுரா, கர்நாடகா போன்ற மாநில தலைமை மீது அதிருப்தியில் உள்ள தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கு காரணம் கர்நாடகா, திரிபுராவைச் சேர்ந்த அதிருப்தி தலைவர்கள், தங்களது மாநில தலைமையில் செயல்பாடு குறித்த கருத்துக்களை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘குஜராத்தில் கடந்தாண்டு செப்டம்பரில் அம்மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகள்  தொடங்கப்பட்டன. அதன் ஒருபகுதியாகவே, அப்போதைய முதல்வர் விஜய் ரூபானி  பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பூபேந்திர படேலிடம் முதல்வர் பதவி ஒப்படைக்கப்பட்டது.  

தற்போது நடந்த தேர்தலில் அவரது தலைமை மிகப் பெரிய வெற்றி பெற்றதால், அவரே இரண்டாவது முறையாக  முதல்வராக பதவியேற்றார். பிரதமரின் சமீபத்திய உரையின் அடிப்படையில் பார்த்தால் மூன்று மாநில தலைவர்கள் மீது பாஜக தலைமை அதிருப்தியில் உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அம்மாநிலத் தலைமையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேநேரம் தற்போது மாநில தலைவர்களாக உள்ள பலரை மாற்றக் கோரி அதிருப்தி தலைவர்கள் சிலர் தேசிய தலைமையிடம் புகார்களை தெரிவித்து வருவதால், அடுத்தடுத்த வாரங்களில் அதிரடி அறிவிப்புகள் வெளியாகும்’ என்று அவர்கள் கூறினர்.

Related Stories: