4வது டி 20 போட்டி; இந்திய மகளிரணி போராடி தோல்வி: ஆஸி. தொடரை வென்றது

மும்பை: ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் 3 போட்டிகளின் முடிவில் 2-1 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகித்த நிலையில், 4வது டி20 போட்டி மும்பையில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி20 ஓவரில் 188 ரன்களை குவித்தது.

189 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா(16) மற்றும் ஷபாலி வர்மா(20) ஆகிய இருவருமே ஜொலிக்கவில்லை. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 8 ரன்னுக்கு நடையை கட்ட, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியில் இறங்கினார். அவர் 30 பந்தில் 46 ரன்கள் எடுத்தார். போட்டியின் கடைசிகட்டத்தில் ரிச்சா கோஷ் காட்டடியில் இறங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர் 19 பந்தில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் குவித்தார். இருப்பினும் இந்திய அணி 20 ஓவரில் 181 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற தொடரை வென்றது. கடைசி 20 ஓவர் போட்டி நாளை மறுதினம் நடக்கிறது.

Related Stories: