அரியப்பாக்கம் கிராமத்தில் மாணவர்களை பயமுறுத்தும் அங்கன்வாடி மைய கட்டிடம்

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சி அரியப்பாக்கம்  கிராமத்தில்  அங்கன்வாடி மையம் சுமார் 35 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. அதே பகுதியை சேர்ந்த 25 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். தற்போது அங்கன்வாடி மைய கட்டிடம்  சேதம் அடைந்து ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. இதன்காணமாக மழைநீர் கட்டிடத்தின் உள்ளே வருகிறது. அங்குள்ள மாணவர்களுக்கு வழங்க வேண்டிய அரிசி,  பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மழையில்  நனைந்து வீணாகி வருகிறது. மாணவர்களின் புத்தக பைகளும் மழையில் நனைந்துவிடுகிறது.

   

இதனால் தற்போது அங்கன்வாடி மையத்தில் மாணவர்கள் அச்சத்துடன் படித்து வருகிறார்கள்.  எனவே அங்கன்வாடி கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பொதுமக்கள் கூறும்போது, ‘’அரியப்பாக்கம் கிராமத்தில் கடந்த 35 வருடங்களுக்கு முன்பு அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.

 

இந்த மையம் தற்போது சேதம் அடைந்துள்ளதால் மாணவர்கள் ஆபத்தான முறையில் படித்து வருகிறார்கள். எனவே பழைய அங்கன்வாடி மையத்தை அகற்றிவிட்டு புதிய மையத்தை கட்டித்தர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

Related Stories: