அரசியல் சாசனத்தின்படி நியமிக்கப்பட்ட தமிழக ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் தொண்டராக செயல்படுகிறார்: திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு கோயில் மனைகளில் குடியிருப்போர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். இதன்பின்னர் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியிருப்பதாவது: தமிழக அரசு கோயில் மனைகளில் குடியிருப்போரின் நலனை கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக விரைவில் முதல்வரை சந்திக்க உள்ளேன். அதேபோல், வாடகை வசூல் செய்கிறோம் என்ற பெயரில் அதிகாரிகள் அத்துமீறி நடந்து கொள்ளும் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும். சில இடங்களில் கடைகளை காலி செய்யச் சொல்லி வற்புறுத்துவதும் அவற்றை இடிக்கும் முயற்சியில் ஈடுபடுவது போன்ற  விஷயங்கள் அதிர்ச்சியளிக்கிறது.

அதிகாரிகள் ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்படுவார்கள். வீடுகளை இடிக்குமாறு ஆட்சியாளர்கள் யாரும் உத்தரவு பிறப்பிப்பதில்லை. ஆனால் தாங்கள் சரியாக பணி செய்கிறோம் என்பதை காட்டிக் கொள்வதற்காக ஒரு சில அதிகாரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தமிழக ஆளுநரின் செயல்பாடுகளை பொறுத்து பார்க்கையில் அரசியல் சாசனத்தின்படி நியமிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் தொண்டராக இருப்பதாக தோன்றுகிறது. அதேபோல், அதிமுகவை பாஜ உடைக்கிறது என்று சொல்வதை விட பாஜ விழுங்குகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதனை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Related Stories: