இன்ஸ்டாவில் பழகிய நண்பருக்காக மாணவிகள் தூத்துக்குடிக்கு எஸ்கேப்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த மாணவிகள் இருவர் அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களுக்கு அதிகளவில் செல்போன் பயன்படுத்தும் பழக்கம் இருந்ததால், படிக்குமாறு பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனம் வெறுத்துப்போன மாணவிகள் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். மாணவிகள் காணாமல் போனது குறித்து, மாணவிகளின் பெற்றோர் நேற்று முன்தினம் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளனர். போலீசார், மாணவிகள் இருவரையும் மீட்டுள்ளனர்.

இதுகுறித்து காரைக்குடி ஏஎஸ்பி ஸ்டாலின் கூறுகையில், ‘‘மாணவிகள், 19 வயதுடைய இன்ஸ்டாகிராம் நண்பரை தொடர்பு கொண்டு தூத்துக்குடிக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர் புத்தி சொல்லி திரும்ப அனுப்பியுள்ளார். இருவரும் தூத்துக்குடியிலிருந்து காரைக்குடிக்கு வராமல் சென்னைக்கு செல்ல பஸ்சில் ஏறி அருகே இருந்தவரின் செல்போனை வாங்கி, பெற்றோரிடம் பேசி பத்திரமாக இருக்கிறோம் என கூறிவிட்டு வைத்துள்ளனர். அந்த செல்போன் மூலம் டிரைவரிடம் பேசி அடுத்த போலீஸ் ஸ்டேசனில் மாணவிகளை பத்திரமாக ஒப்படைக்க கூறினோம். அதன்படி சிறுமிகளை மீட்டுள்ளனர்’’ என்றார்.

Related Stories: