இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின் 3 மாதங்களில் ரூ.10 கோடி சம்பாதித்த போரிஸ் ஜான்சன்

லண்டன்: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் 3 மாதங்களில் ரூ.10 கோடி சம்பாதித்து உள்ளார். பொதுக்கூட்டங்களில் பேசியதால் இந்த வருவாய் வந்துள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார். இங்கிலாந்து பிரதமராக 2019 ஜூலை 24 முதல் 2022 செப்டம்பர் 6ம் தேதி வரை இருந்தவர் போரிஸ் ஜான்சன். பிரபல பேச்சாளர். பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு கடந்த 3 மாதங்களில் மட்டும் அவர் ரூ.10 கோடி சம்பாதித்து உள்ளார். இதுபற்றி அவர் கணக்கு கொடுத்த போது அமெரிக்கா, போர்ச்சுகல், இந்தியாவில் பல்வேறு கருத்தரங்குகளில் கலந்து கொண்டு பேசியதால் அவருக்கு இந்த தொகை கிடைத்தது தெரிய வந்துள்ளது.

இதுபற்றிய தகவல் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நலன் பற்றிய அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு கூட்டத்தில் பேச ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை கட்டணம் வசூலித்து உள்ளார். நியூயார்க்கில் உள்ள வங்கியாளர்கள், அமெரிக்காவில் உள்ள காப்பீட்டாளர்கள், போர்ச்சுகலில் நடந்த உச்சிமாநாடு, இந்தியாவில் நடந்த கருத்தரங்கில் அவர் பங்கேற்று பேசியதால் கடந்த 3 மாதங்களில் மட்டும் ரூ.10 கோடி வரை அவர் சம்பாதித்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ல் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிட போரிஸ் ஜான்சன் தகுதியானவர் என்று கட்சி எம்பிக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Related Stories: