ஒடுகத்தூர் பேரூராட்சியில் மேற்கூரை சேதமடைந்து மழைநீர் கொட்டும் விஏஓ அலுவலகம்-பாத்திரங்களுடன் அல்லாடும் அலுவலர்கள்

ஒடுகத்தூர் : வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பேரூராட்சி அலுவலகம் அருகே கடந்த 2005ம் ஆண்டு ₹10 லட்சம் மதிப்பில் புதிதாக விஏஓ அலுவலகம் கட்டப்பட்டது. பின்னர், ஒடுகத்தூர் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, அதே கட்டிடத்தில் ஆர்ஐ அலுவலகமும் செயல்பட தொடங்கியது. 30க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய இந்த அலுவலகம் கட்டப்பட்டு 17 ஆண்டுகள் ஆகிறது. இங்கு, நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் பட்டா, நிலம் மற்றும் சான்றிதழ்கள் தொடர்பாக வந்து செல்கின்றனர்.

அதிக ஊராட்சிகளை கொண்டதாலேயே அரசு கோப்புகள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், காலப்போக்கில் கட்டிடம் அதன் உறுதித்தன்மையை இழந்து தற்போது சுவர்களில் விரிசல்  ஏற்பட்டுள்ளது. இதனால், மழைக்காலத்தில் வெளியே பெய்யும் மழை தற்போது விஏஓ கட்டிடத்திற்கு உள்ளேயும் பெய்ய தொடங்கிவிட்டது. இந்த கட்டிடத்தின் மேற்கூரை முற்றிலும் சேதமானதால் தண்ணீர் அருவிபோல் கொட்டுகிறது.இந்த மழைநீரை அலுவலக ஊழியர்கள் பாத்திரங்களை வைத்து பிடித்து வரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதேபோல், மழைநீர் உள்ளே கொட்டுவதால் பாதுகாக்கப்பட்ட கோப்புகள் நனைய தொடங்கிவிட்டது. தற்போது, அருகிலேயே ஆர்ஐ அலுவலக கட்டிடம் புதிதாக கட்டப்படுள்ளது. ஆனால், விஏஓ அலுவலகம் மட்டும் இந்த நிலையில் உள்ளது. மேலும், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மழைநீர் உள்ளே கொட்டுவதை பார்த்து அரசு அலுவலகத்திற்கே இந்த நிலையா? என்று வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே, ஓட்டை உடைசலுடன் காணப்படும் விஏஓ அலுவலகத்தை இடித்துவிட்டு அங்ேகேய புதிய கட்டிடம் கட்ட நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

புதிய கட்டிடம் திறப்பு விழா எப்போது?

ஒடுகத்தூர் பேரூராட்சியில் உள்ள அரசு கட்டிடத்தில் ஆர்ஐ, விஏஓ என 2 அலுவலகங்கள் இயங்கி வருகிறது. தற்போது, கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் கட்டிடம் சேதமாகி, மழைநீர் உள்ேள கொட்டுகிறது. அதேபோல், அருகிலேயே புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில வேலைகளே பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 3 மாதங்களாகவே கட்டிடம் திறக்கப்படவில்லை. எனவே, அந்த பணிகளை விரைந்து முடித்து புதிய கட்டிடத்தை விரைவில் திறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: