தர்மபுரி அருகே மக்னா உள்பட 3 யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம்

*பயிரை துவம்சம் செய்ததால் விவசாயிகள் அதிர்ச்சி

*விரட்ட சென்றவர்களை திருப்பி துரத்தியதால் களேபரம்

தர்மபுரி : பென்னாகரம் அருகே வனப்பகுதியில் முகாமிட்டுள்ள மக்னா உள்பட 3 யானைகள், ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. நேற்று துரத்த சென்றவர்களை, திருப்பி விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே திகிலோடு வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்னா உள்பட 3 யானைகள், மாமரத்துப்பள்ளம் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரத்தில், ஊருக்குள் புகுந்து பயிர்களை துவம்சம் செய்து வருகின்றன.

கடந்த 3 நாட்களில் மட்டும் மாமரத்துப்பள்ளம், ஆலமரத்துப்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் நெல், சோளம், ராகி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. நேற்று முன்தினம் இரவு, மாமரத்துப்பள்ளம் கிராமத்திற்குள் புகுந்த யானைகள், தக்காளி செடிகளை தின்று சேதப்படுத்தின. இரவு நேரத்தில் யானைகளின் பிளிறல் சத்தத்தால், கிராம மக்கள் தூக்கத்தை தொலைத்தனர். கடந்த 5 நாட்களாக இரவு நேரத்தில், வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வருவதும், பயிர்களை துவம்சம் செய்துவிட்டு பொழுது புலர்ந்ததும் ஓட்டம் பிடிப்பதுமாக யானைகள் கண்ணாமூச்சி காட்டி வந்தன.

இதனால், பொறுமை இழந்த கிராம மக்கள், நேற்று யானைகளை விரட்டும் முயற்சியில் இறங்கினர். இதுகுறித்த தகவலின்பேரில், அப்பகுதியில் பத்திரிகையாளர்கள் மற்றும் வீடியோகிராபர்கள் 20க்கும் மேற்பட்டோர் திரண்டனர். வனத்திற்குள் புகுந்த 3 யானைகளையும் தேடிய போது, ஊருக்கு அருகிலேயே சுமார் 200 மீ., தொலைவில் மரம், செடி-கொடிகளுக்கிடையே 3 யானைகளும் மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போது, சிலர் பட்டாசுகளை கொளுத்தி போட்டனர். காலை முதல் மதியம் வரை, சுமார் 100 தடவை பட்டாசு கொளுத்தி வீசியும், யானைகள் அசைந்து கொடுக்கவில்லை. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு பாலக்கோடு வனச்சரகர் நடராஜன் மற்றும் ஊழியர்கள் விரைந்து சென்று, பலமாக டமாரம் அடித்தனர். மேலும், அதிக சக்தி வாய்ந்த டார்ச் லைட் கொண்டு, யானைகள் பதுங்கியிருந்த புதருக்குள் வெளிச்சத்தை பாய்ச்சினர். இதையடுத்து, ஒருவழியாக 3 யானைகளும் வெளியே வந்தன.

அப்போது, சிலர் தீப்பந்தத்தை கொளுத்தியதால், மக்னா யானை கூட்டத்தை விட்டு பிரிந்தது. மற்ற இரு யானைகளும் புதருக்குள் இருந்து வெளியே தலைகாட்டுவதும், உள்ளே செல்வதுமாக இருந்த நிலையில், மக்னா யானை ஆக்ரோஷத்துடன் மக்கள் கூட்டத்தை விரட்டியது. இதனால், அதிர்ச்சியடைந்த பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக்கார்கள் உயிர் பிழைக்க ஆளுக்கொரு பக்கம் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

அப்போது, கால் இடறி விழுந்ததில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை கிராம மக்கள் மற்றும் வனத்துறையினர் மீட்டு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து யானைகள் அங்கேயே முகாமிட்டிருந்தன. எப்போது வேண்டுமானாலும் ஊருக்குள் வரலாம் என்ற தகவலால், அப்பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

யானைகளை விரட்ட தற்காலிக பணியாளர்

பாலக்கோடு வனச்சரகர் நடராஜன் கூறுகையில், ‘பாலக்கோடு வனப்பகுதி பென்னாகரம் முதல் காடுசெட்டிபட்டி வரை, சுமார் 22 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. நடப்பாண்டில் கடந்த 6 மாதத்தில் மட்டும், 3 முறை யானைகள் ஊருக்குள் புகுந்துள்ளன. இந்த யானைகளை விரட்டுவதற்காக பாலக்கோடு வனச்சரகத்தில் மட்டும் 6 காவலர்கள் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாமரத்துப்பள்ளம் பகுதி மக்கள், இரவு நேரத்தில் வீடுகளை விட்டு வெளியே வராமல், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளோம். மேலும், யானைகள் பயிர் சேதத்திற்காக ஏக்கருக்கு ₹25 ஆயிரம் வரை நிவாரணம் வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் பாலக்கோடு வனச்சரக அலுவலகத்தில் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம்,’ என்றார்.

50 ஏக்கர் பயிர் நாசம்

பாலக்கோடு வனச்சரகம், பென்னாகரம் அருகே உள்ள ஆத்துக்கொட்டாய் பகுதியில் பரவலாக நெல், தக்காளி, சோளம், வாழை பயரிட்டுள்ளனர். தென்னையும் செழித்து வளர்ந்துள்ளது. அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், கூட்டாறு மற்றும் பாப்பனேரிபள்ளம் உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 50 ஏக்கர் பயிர்களை யானைகள் சேதப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: