முதல் முயற்சி தோல்விக்கு பின் டிவிட்டரில் மீண்டும் ப்ளூ டிக் அறிமுகம்; இன்று முதல் மாத சந்தா செலுத்தி பெறலாம்

நியூயார்க்: டிவிட்டரில் ப்ளூ டிக் வழங்கும் பிரீமியம் சேவையின் முதல் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், மீண்டும் அந்த சேவை இன்று முதல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி பணக்காரரான அமெரிக்காவின் எலான் மஸ்க் ரூ.3.5 லட்சம் கோடி கொடுத்து டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு, அதில் சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக்குக்கு மாத கட்டணம் விதிக்கப்படுவதாக அறிவித்தார். பொதுவாக இந்த ப்ளூ டிக் பெறும் நிறுவனங்கள், பிரபலங்கள், அரசு நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும். ஆனால், மாத சந்தா செலுத்தி யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் பெறலாம் என மஸ்க் அறிவித்தார்.

இதன் கட்டணமாக மாதம் சுமார் ரூ.656 (8 அமெரிக்க டாலர்) நிர்ணயிக்கப்பட்டது. சமீபத்தில் இந்த ப்ளூ டிக் அறிமுகப்படுத்தப்பட்ட போது, ஏராளமான போலி கணக்குகளுக்கு ப்ளூ டிக் சேவை வழங்கப்பட்டது. இதனால் உடனடியாக இந்த சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் ப்ளூடிக் பிரீமியம் சேவையை இன்று முதல் தொடங்க இருப்பதாக டிவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. ‘ப்ளூடிக் பெறும் சந்தாதாரர்கள் குறைவான விளம்பரங்களை பெறுவார்கள். நீண்ட நேர வீடியோக்களை பதிவேற்ற முடியும். மேலும் அவர்களின் ட்வீட்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பிரதிபலிக்கப்படும்’ என டிவிட்டர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: