பணிகள் 2 மாதத்தில் துவக்கம் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் ரூ.90 கோடி செலவில் சீரமைப்பு-தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பேட்டி

ராமேஸ்வரம் : ரூ.90 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் சீரமைப்பு பணிகள் 2 மாதத்தில் துவங்குமென தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு செய்தார்.

தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் நேற்று ராமேஸ்வரத்திற்கு வந்தார். ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின், ரயில் நிலையத்தில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதை தொடர்ந்து தனுஷ்கோடிக்கு சென்றவர் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை அமையவுள்ள பகுதி, ரயில் நிலையம் அமையவுள்ள பகுதிகளை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவு நிர்வாக அதிகாரி ராஜேந்திர பிரசாத், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் ஆனந்த், ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் திட்ட அதிகாரி கமலாகரரெட்டி, முதன்மை பொறியாளர் தவமணி பாண்டி, துணை முதன்மை பொறியாளர் ரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆய்விற்குபின் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் கூறுகையில், ‘‘ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை ரூ.90 கோடி செலவில் மேம்படுத்தும் பணிகள் இன்னும் 2 மாதத்தில் துவங்கப்படும். இதற்கான டெண்டர் விடப்பட்டு பூர்வாங்க பணிகள் நடந்து வருகிறது. சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வரும் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பயணிகள் வருவதற்கும், புறப்படுவதற்கும் தனித்தனியாக முனையங்கள் அமைக்கப்படவுள்ளன. இரண்டு மாடியில் அமையவுள்ள புதிய ரயில் நிலைய கட்டிடத்தில் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தின் பணிகள் 2023 மார்ச் மாதத்தில் முடிவடையும். ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் போக்குவரத்துக்காக ரயில் பாதைக்கான நிலம் எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்படும். உச்சிப்புளி இந்திய கடற்படை பருந்து விமான தளம் விரிவாக்கத்திற்காக ரயில் பாதை மாற்றியமைக்கப்பட்ட பின்னர் மதுரை - ராமேஸ்வரம் வரையிலான ரயில் பாதை மின்மயமாக்கும் பணிகள் துவங்கப்படும்’’ என்றார்.

Related Stories: