குப்பைகள், கட்டிட கழிவுகள் கொட்டுவதை தடுக்க பாலாற்றங்கரையோரம் தடுப்பு வேலி அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிப்பு

*ஆய்வு செய்த கலெக்டர் அதிரடி

வேலூர் :  பாலாற்றில் குப்பைகள், கட்டிட கழிவுகள் கொட்டுவதை தடுக்க பாலாற்றங்கரையோரம் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நேற்று கலெக்டர் மற்றும் மேயர் பாலாற்றில் ஆய்வு செய்தன்.வேலூர் பாலாற்றில் கட்டிடக்கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுவது அடிக்கடி நடக்கிறது. இதனால் பாலாறு குப்பை கழிவுகளுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இருப்பினும் பட்டப்பகலில் கூட கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து ஆற்றில் கொட்டும் சம்பவம் நடக்கிறது. கடந்த 5ம் தேதி கட்டிட கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டது. இதுதொடர்பாக ‘தினகரன்’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் மறுநாள் துரித நடவடிக்கை மேற்கொண்டு அவற்றை அகற்றினர்.

இதற்கிடையில், காட்பாடியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் பேசிய கலெக்டர் குமாரவேல்பாண்டியன், பாலாற்றில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அமைச்சர் ஒப்புதல் பெற்று இரும்பு வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்நிலையில் நேற்று காலை வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மயானப்பாதை வழியாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மேயர் சுஜாதா ஆகியோர் சென்று பாலாற்றை ஆய்வு செய்தனர். அங்கு குப்பைகளை கொட்டுவதை தடுக்க இரும்பு கம்பிகள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பாலாற்றில் குப்பை மற்றும் கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதற்காக மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பாலாற்று பகுதியில் இருபுறமும் இரும்பு கம்பி வேலி அமைக்க நேற்று ஆய்வு செய்யப்பட்டது. இதுதொடர்பாக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் வேலி அமைக்கும் பணிகள் தொடங்க மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது’ என்றனர்.

Related Stories: