கிருஷ்ணகிரியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் சமுதாய பண்ணைப்பள்ளிக்கு ₹1.29 கோடி நிதி-30 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது

கிருஷ்ணகிரி : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல் படி, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டமானது, புத்துணர்வு பெற்று, பல மேம்பாடுகள் செய்யப்பட்டு, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் என பெயர் மாற்றம் செய்து, செயல்பட்டு வருகிறது. இத்திட்டமானது உலக வங்கி நிதிஉதவியுடன் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்படுகிறது. ஊரக நிறுவனங்களை ஊக்குவிக்கவும், கிராமப்புற மக்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்துடனும் துவங்கப்பட்டதாகும்.

 

தமிழக கிராம சூழலை மறுசீரமைக்க வெவ்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது. வறுமை ஒழிப்பை தாண்டி நிலையான வாழ்வாதாரத்தை அமைத்து, அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு, ஊரக நிறுவனங்களை ஊக்குவிப்பது, அவர்களுக்கு தேவையான நிதியுதவிகளை அமைத்து தருவது, வேலைவாய்ப்புகள் உருவாக்குவதே இத்திட்டத்தின் குறிக்கோளாகும்.  இத்திட்டம் தமிழகத்தில் 31 மாவட்டங்களில், 120 வட்டாரங்களில் 3,994 ஊராட்சிகளில் செயல்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 76 உழவர் உற்பத்தியாளர் குழு மற்றும் 39 தொழிற்குழு தொடங்கப்பட்டு, வெற்றி கரமாக நடந்து வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழு மற்றும் தொழில் குழுக்களுக்கு தலா ₹75 ஆயிரம் என மொத்தம் ₹86.24 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இம்மானியத்தின் நோக்கமானது கிராமப்புறத்தில் உள்ள உழவர்களை மேம்படுத்துதல் மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகும்.

இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தொழிற்குழுக்களின் முக்கிய செயல்பாடுகள் தேங்காய் மதிப்பு கூட்டுதல், மாடு மற்றும் கோழி வளர்ப்பு மேலாண்மை, தக்காளி மதிப்பு கூட்டுதல் ஆகியவை ஆகும். கிராமப்புறங்களில் விளை விக்கப்படும் பொருட்களை மதிப்பு கூட்டுதல் செய்வதன் மூலம், அதிக லாபம் ஈட்ட முடிகிறது. அத்துடன் வேலை வாய்ப்பும் உருவாக்கப்படுகிறது. உழவர் உற்பத்தியாளர் குழுக்களை தொடர்ந்து, பர்கூர் மாஞ்சோலை உழவர் நிறுவனம், கிருஷ்ணகிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளது.

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் சமுதாய திறன் பள்ளிகள் மற்றும் சமுதாய பண்ணைப்பள்ளிகள் செயல் பட்டுக்கொண்டிருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21 சமுதாய திறன் பள்ளிகளும், 145 சமுதாய பண்ணைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. சமுதயா திறன் பள்ளியில் தொழிலுக்கு தேவையான திறன் பயிற்சியை ஏற்கனவே அத்தொழிலில் தகுதிவாய்ந்த, அனுபவம் பெற்றவர் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சமுதாய திறன் பள்ளிக்கும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் நிதி மானியமாக வழங்கப்படுகிறது.

அதன்படி இதுவரை ₹16.24 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடிந்த பின் சுய வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கிறது. மேலும், சமுதாய பண்ணைப்பள்ளியில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களில் இருக்கும் விவசாயிகளுக்கு பயிர் மேலாண்மை, இயற்கை முறையில் விவசாயம் மற்றும் பயிற்சி உற்பத்தியை பெருக்குதல், மாடு மற்றும் கோழி வளர்ப்பு மேலாண்மை ஆகியவை வேளாண்மை அறிவியல் மையம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலமாக சமுதாய பண்ணைப்பள்ளிக்கு ₹1 கோடியே 28 லட்சத்து 82 ஆயிரத்து 800 நிதியாக வழங்கப்பட்டுள்ளது. திட்ட பயனாளிகள் அனைவரும் சுயஉதவிக்குழு உறுப்பினராகவோ அல்லது சுய உதவிக்குழு உறுப்பினரின் குடும்பத்தில் உள்ளவராகவோ இருக்க வேண்டும். தகுதியுள்ள, விருப்பமுள்ள சுயஉதவி குழு உறுப்பினர்கள், தனிநபர் தொழில் முனைவோர், உற்பத்தியாளர் கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் சுயதொழில் செய்ய விரும்பும் நபர்கள் மற்றும் பெண்கள், பட்டியல் பழங்குடியினர், பட்டியல் இனத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில் முனைவோர் மீது இந்தத் திட்டம் சிறப்பு கவனம் செலுத்துகிறது.

வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், காவேரிப்பட்டணம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 3 ஒன்றியங்களில் உள்ள 102 ஊராட்சிகளில் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் முக்கிய நிதி சேவையான இணை மானிய திட்டம், தற்போது முழு முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் தனிநபர் தொழில் செய்வோர் அல்லது தொழில் துவங்க விரும்புவோருக்கு வங்கி மூலமாக கடனுதவி பெற்று தரப்படுகிறது. தகுதிவாய்ந்த நபர்களுக்கு ₹1 லட்சம் முதல் ₹50 லடசம் வரை தொழில் கடனும்,  30 சதவீதம் வரை மானியமும் வழங்கப்படுகிறது.

மேலும் சிறப்பு அம்சமாக கடன் கொடுக்கப்படும் வங்கிக்கு மானியமானது முன் மானியமாக வங்கியின் சப்சீடி ரிசர்வ பண்ட் கணக்குக்கு அனுப்பப்படும். இதனால் வங்கிகளுடன் இணைந்து, பயனாளிக்கு விரைவாக கடன் வழங்க செயல்படுத்தப் படுகிறது. எனவே, இந்த திட்டத்தை அனைவரும் பயன்படுத்தி பயன்பெற மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

Related Stories: