காஞ்சிபுரம் மேயர் தலைமையில் புயல் முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்

காஞ்சிபுரம்: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தமானது மாண்டஸ் புயலாக வலுவடைகிறது. இதையடுத்து சென்னை,  காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 8 மாவட்டங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதியிலும் அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், பொதுப்பணித்துறை, சுகாதார துறை, மின்சாரத்துறை, காவல் துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேயர் மகாலட்சுமி பேசுகையில்,“மாண்டஸ் புயலால் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சாயும் தருவாயில் உள்ள பழமையான மரங்கள், மின்கம்பிகள் அருகில் உள்ள மரக்கிளைகளை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அகற்றவேண்டும். சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்களையும் அகற்றவேண்டும்.

குடிசை மற்றும் இடியும் தருவாயில் உள்ள கட்டிடங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கவேண்டும். மின்னழுத்தத்தால் கால்நடைகள் உயிரிழக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.  பேரிடர் காலத்தில் மாநகராட்சியை பொதுமக்கள் தொடர்புகொள்ள 24 மணி நேரமும் கட்டணமில்லா தொலைபேசி தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது” என்றார். நிகழ்ச்சியில், துணை மேயர் குமரகுருநாதன், ஆணையர் கண்ணன், மண்டல குழு தலைவர்கள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: