கோம்பை மலையடிவாரத்தில் காட்டு யானைகளால் பாழான தென்னை மரங்கள்: விவசாயிகள் கவலை

தேவாரம்: தேவாரம் அருகே கோம்பை மலையடிவாரத்தில், காட்டு யானைகள் தென்னை மரங்களை ஒடித்து சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தேவாரம் அருகேயுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அதிகமான எண்ணிக்கையில் காட்டு யானைகள் வாழ்கின்றன. இவை சபரிமலை சீசன் தொடங்கும் போது தமிழக - கேரளா எல்லையோர காடுகளில் இருந்து இடம் பெயர்வது வழக்கமாக உள்ளது.

இதனால் ஒவ்வொரு வருடமும், தேவாரம், கோம்பை, பண்ணைபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மலையடிவாரத்தின் அருகே அமைந்திருக்கும் விவசாய நிலங்களுக்கு செல்ல இப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைவது வழக்கம்.இதற்கு காரணம் காட்டுப்பகுதியில் இருந்து மலையடிவாரம் அருகேயுள்ள விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக வந்து நாசம் செய்வது வழக்கமாக உள்ளது.

இந்த வருடமும் சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், தமிழக - கேரளா காடுகளில் இருந்து, காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக வெளியேறி உள்ளன.இதில் நான்கு யானைகள் ஒன்று சேர்ந்துகொண்டு, நேற்று முன்தினம் கோம்பை மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள குணசேகரன் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்தன.பின் அங்குள்ள 30 தென்னை மரங்கள் மற்றும் மலையடிவாரத்தை ஒட்டியுள்ள தோப்புகளில் இருக்கும் மரங்களை சேதப்படுத்தி உள்ளன. இதில் 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் நாசம் அடைந்துள்ளன.

காட்டு யானைகள் தென்னை மரங்களில் உள்ள ஓலைகளை மட்டும் ஒடிக்காமல், நடுப்பகுதியினையும் சேதப்படுத்தி விடுகின்றன. இதன்படி மலையடிவார பகுதிகளில் காணப்படும் விவசாய நிலங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், அங்குள்ள தங்கள் நிலங்களுக்கு செல்ல விவசாபிகள் அச்சமடைந்துள்ளனர்.

Related Stories: