சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் திருக்கோவில் இணை ஆணையர் மறைவுக்கு அமைச்சர் சேகர்பாபு இரங்கல் ..

சென்னை: சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் திருக்கோவில் இணை ஆணையர் காவேரி, இன்று காலை உயிரிழந்தார். உயிரிழந்த கபாலீஸ்வரர் திருக்கோவில் இணை ஆணையர் காவேரிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அளித்துள்ள இரங்கல் செய்தி:

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் திருக்கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலராகப் பணியாற்றி வந்த த.காவேரி உடல்நலக் குறைவால் இன்று (07.12.2022) இயற்கை எய்தினார் என்ற செய்தி எனக்குத் தாங்கொணாத்துயரை அளிக்கிறது. இவரின் இறப்பு துறைக்கு பேரிழப்பாகும்.

திருக்கோயில்களில் சமூகநீதியை நிலைநாட்டி, பக்தர்களுக்கு முழுமையான சேவைகளை வழங்குவதில் முனைப்புக் காட்டியதோடு,  திருவிழாக்கள், சிறப்புப் பூஜைகள், அரசின் திட்டங்கள் என மரபுவழி திட்டங்களைத் தொன்மை மாறாமல் செய்வதிலும், இவ்வரசு பொறுப்பேற்றப் பின்னால் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்துவதிலும் முன்னோடியாக திகழ்ந்தவர். குறிப்பாக, திருக்கோயில்களின் சொத்துக்கள் மீதான ஆக்கிரமிப்புகளை அதிகளவில் மீட்டெடுத்தவர்.

கல்வி நிறுவனங்கள் தொடங்குவதில் இரவு பகல் பாராது உழைத்து உரியகாலத்தில் செயல்படுத்தி முடித்தவர். அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவ, மாணவியரைத் தனது பிள்ளைகளைப் போன்று உடனிருந்து நல்ல ஆளுமைக்கும், கல்விக்கும் தயார்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றவர்.

பாரதம் முழுவதும் திருக்கோயில்களின் இணக்கத்தை வலியுறுத்தி தமிழக அரசின் சார்பில் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் அருட் பிரசாதத்தை தெலுங்கானா மாநிலத்தின் ஸ்ரீசைலம் ஸ்ரீபிரமராம்பாள் மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோயிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கும் நிகழ்விற்காகத் தனது உடல் நிலை பாதிப்பை பொருட்படுத்தாமல், சிகிச்சையைத் தள்ளி வைத்துவிட்டு ஆன்மிக நல்லுறவை முன்னிறுத்த வேண்டுமென்று அரசின் திட்டத்தை அருமையாக நிறைவேற்றிய தன்னலமற்ற தியாகத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

வீரமங்கை வேலுநாச்சியார் உதித்த மண்ணில் பிறந்த காவேரி திருக்கோயில்கள் மதவாத சக்திகளின் கூடாரமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக திருக்கோயிலின் வழிபாட்டில் சமூக நீதியையும், மதவாதம் தவிர்த்த ஆகம வழிபாட்டு முறையையும் முறைப்படி கடைப்பிடித்துக் காட்டியவர். தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பான ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை‘  எனும் திட்டத்தை முதன்முதலில் செயல்படுத்தி அர்ச்சகர் பெயரோடு பதாகைகளை வைத்து தமிழுக்குச் சிறப்பு செய்தவர். முதலமைச்சரால் கொண்டு வரப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியவர்.  

அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் அனைத்துப் பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றியது, தரமான பிரசாதத்தை உறுதி செய்யும் தரசான்று பெற்றது, மகாசிவராத்திரி விழாவை, மக்கள் விழாவாக நடத்தி காட்டியது,  திருக்கோயில் தலவரலாற்றை அனைவரும் அறியும் வண்ணம் LED டிவி நிறுவியது, காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் திட்டத்தைத் செயல்படுத்தியது என பக்தர்களுக்கு நலன் பயக்கும் திட்டங்களை முன்னோடியாக செயல்படுத்தி காட்டியவர்.

அன்னாரின் மறைவில் கண் முன்நின்ற திட்டங்களே இத்தனை! இதுபோன்று பக்தர்களுக்கும், அலுவலர்களுக்கும் செய்த நற்பயன்கள் சொல்லிமாளாதவை. இத்தகைய பெருமைக்குரிய சகோதரி திருமதி காவேரி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: