நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக மூன்றாவது மாடியில் சிக்கிய பூனை-தீயணைப்புத் துறையினர் மீட்டனர்

நாகர்கோவில் :  நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மூன்றாவது மாடியில் சிக்கிய பூனையை மீட்க தீயணைப்பு துறையினர் சாதுர்யமாக மீட்டனர்.

 நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களை உள்ளடக்கியதாகும். நேற்று காலை மூன்றாவது தளத்தில் சன் ஷேடு பகுதியில் பூனை ஒன்று  இருந்தது. மூன்றாவது தளத்தில் இருந்து ஜன்னல் வழியாக அது சன்ஷேடு பகுதியில் குதித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அந்த பூனை சன் ஷேடில் அங்கும் இங்குமாக சத்தம் போட்டுக் கொண்டு ஓடியது. இதனை பார்த்த கலெக்டர் அலுவலக பணியாளர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் முகம்மது சலீம் தலைமையில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பூனையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

 தீயணைப்பு வீரர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மொட்டை மாடிக்கு சென்றனர். அங்கிருந்து ஒரு பணியாளர் கயிறு கட்டி 3 தளத்தின் சன்ஷேடு பகுதிக்கு இறங்கினார். அப்போது அங்கு அமைக்கப்பட்டு இருந்த ஏசிக்கிடையே சிக்கி இருந்த பூனையை மீட்க முயன்றார். ஆனால் பூனை அவரைக்கண்டதும் அங்கிருந்து வேறு பகுதிக்கு தாவி ஓடியது. மேலும் சன்ஷேடு பகுதியின் முனையில் போய் நின்றுகொண்டது.தொடர்ந்து உயிரை பணயம் வைத்து பணியாளர் பூனையை பின் தொடர்ந்து சென்றார்.

 பின்னர் முகப்பு பகுதி ஒரு மூலைக்கு சென்ற பூனை ,அதன் பின்னர் ஓட முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பூனை சன்ஷேடில் இருந்து கீழே குதிக்கும் சூழலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து தரையில் நின்றிருந்த வீரர்கள் தார்ப்பாய் ஒன்றை விரித்து பிடித்திருந்தனர். மூன்றாவது மாடியில் இருந்து பூனையை வீரர் காலால் தட்டிவிட தார்பாயில் அது குதித்தது. பின்னர் அங்கிருந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் தப்பி ஓடியது.இதனால் கலெக்டர் அலுவலகத்தில் காணப்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்தது.

Related Stories: