பாபர் மசூதி இடிப்பு தினம்: சபரிமலையில் டிரோன் மூலம் கண்காணிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக 65 முதல் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.

இதற்கிடையே நேற்று திங்கட்கிழமை 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சபரிமலையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சன்னிதானம் மற்றும் பம்பையில் 2 எஸ்பிக்கள் தலைமையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் பாதையில் பல பகுதிகளில் மெட்டல் டிடெக்டர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று சன்னிதானம், பாண்டித்தாவளம் உள்பட பகுதிகள் டிரோன் மூலம் கண்காணிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க கோயிலை சுற்றி உள்ள வனப்பகுதிகளில் சந்தேகப்படும்படியாக யாராவது நடமாடுகிறார்களா? என்பதை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

Related Stories: