வனத்துறையின் விதை ஆராய்ச்சி மையத்தில் முளைப்பு திறனுடன் கூடிய 200 மரங்களின் விதைகள் விற்பனைக்கு தயார்-வனத்துறையின் ஆராய்ச்சியாளர் தகவல்

திருச்சி : திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள வனத்துறையின் விதை மையமானது விதைகளை குறித்து ஆராய்ந்து, அவற்றின் அழிவு நிலையில் இருந்து அவற்றை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட ஆராய்ச்சி மையமாக செயல்பட்டு வருகிறது. இந்த வனத்துறை விதை மையத்தின் மிக முக்கிய பணிகள் விதைகளை பெறுதல், விதைகளை ஆய்வுக்கு உட்படுத்துதல், விதைகளை சுத்தம் செய்தல், விதைகளை சேமித்து வைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு நல்ல முளைப்புத்திறன் உள்ள விதைகளை பாதுகாக்கும் பணியை செய்கின்றனர்.

இந்த விதை மையத்தின் வனத்துறையின் ஆராய்ச்சியாளர் மற்றும் கண்காணிப்பாளர் புவியரசன் மற்றும் மையத்தின் மேற்பார்வையாளர் ராம்சுந்தர் ஆகியோர் விதை மையத்தின் பணிகள் குறித்து கூறுகையில், திருச்சி கோட்டம் முழுவதும் உள்ள ஆராய்ச்சி சரகர்கள் பல்வேறு இடங்களில் உள்ள விதை உற்பத்தி தோட்டங்கள் மற்றும் நல் இயல் மரங்களிலிருந்து தரமான விதைகளை சேகரித்து இந்த மையத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். அப்படி அனுப்பப்படும் விதைகள் அனைத்தும் அது சேகரிக்கப்பட்ட நாள், மர இருப்பிடம், கடல் மட்டத்திலிருந்து உயரம், சலவு நோக்கும் திசை, வருட மழையளவு, தாய்மரத்தின் தடிமர உயரம், கிளைகள் பிரியும் தன்மை, நாரின் வளைவு தன்மை முதலான விவரங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டு அனுப்பி வைக்கப்படும்.

ஒரு விதையின் முளைக்கு சதவீதம் அறிய குவியலாக உள்ள விதைகளில் இருந்து விதைகளை பொறுக்கி எடுத்து விதையின் கடினத் தன்மைக் கேற்ப வெந்நீரிலோ அல்லது நேரிடையாகவோ பிளாஸ்டிக் அல்லது துருப்பிடிக்காத இரும்புத் தட்டுகளில் சலித்து கிருமி நீக்கிய மணல் நிரப்பி விதைத்து நீர் பாய்ச்சி முளைப்புத்திறன் சதவீதம் அறியப்படுகிறது.

அதேபோல் விரைவு முளைப்புச் சோதனை மூலம் நீண்ட நாட்கள் காத்திருக்காமல் உடனடியாக முளைப்புத்திறன் அறிய முடியும். பொறுக்கப்பட்ட விதைகளை ஒரு இரவு குளிர்ந்த நீரில் ஊற வைத்து நீள வாக்கில் வௌியே தெரியுமாறு வெட்டி பின்னர் அவற்றை டெட்ரோ சோலியம் கரைசலில் 17 மணி நேரம் இருட்டில் அமிழ்த்தி வைத்தால் இளம்சிவப்பு ஏற்படும் விதைகள் முளைப்புதிறன் உள்ளது என்பதை அறியலாம்.

மேலும் ஈரப்பதம் எவ்வளவு என்பதை கண்டறிய குவியலில் இருந்து மாதிரி விதைகள் எடுத்து ஆய்வு செய்ய வேண்டும். ஈரப்பதம் விதைகளின் பரிணாமத்தை பொருத்து வேறுபடுகிறது. இரு வழிகளில் ஈரப்பதம் கண்டறியப்படுகிறது. பொதுவாக முளைப்பு பரிசோதனையில் விதைகளில் முளைப்புத் திறன் அறியப்படுகிறது. ஆனால் முளைக்கும் அனைத்து செடிகளும் உயிர் வாழ்தல் அரிது எனவே உயிர்ச்செடி சதவீதம் அறிய முளைத்த செடிகளை வெட்ட வௌியில் மண்ணுக்கு மாற்றியோ அல்லது பாலிதீன் பைகளில் மாற்றி 90 நாட்கள் கழித்து பிழைத்த செடிகளை எண்ணிக்கை செய்து உயிர் செடிகள் சதவீதம் அறியப்படுகிறது.

பொதுவாக பெறப்பட்ட விதைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் சுத்தம் செய்யப்படுகிறது. குறிப்பாக கடின உறையுடன் இருக்கும் விதைகளை இயந்திரம் மூலம் சுத்தம் செய்வோம்.பெரிய அளவில் உள்ள இறக்கை உள்ள விதைகள் மற்றும் இயந்திரம் மூலம் பிரித்தெடுக்க முடியாத விதைகளை கற்கள் குச்சிகள் முதலியவற்றிலிருந்து கையினால் பிரித்தெடுக்கப்படும்.

அடுத்ததாக அளவில் சிறிய விதைகளை காற்றில் தூற்றுதல் மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. கடின மேல் தோலுடைய வழவழப்பான சதைப்பகுதி உடைய விதைகளை பிரித்தெடுக்க உரலில் இட்டு உலக்கை மூலம் குத்தி பிரித்தெடுக்கபடுகிறது.

மிகச்சிறிய விதைகளை வெவ்வேறு துளை அளவு கொண்ட சலிப்பான்களை உபயோகித்து பிரித்தெடுக்கப்படுகின்றன.சுத்தம் செய்து தரம் பிரிப்பதன் நோக்கம் பூச்சிகளால் தாக்கப்பட்ட விதைகள் ஓரளவுக்கு வௌியேற்றப்படுகின்றன. கற்கள், புள் விதைகள் முதலான தேவையற்ற பொருட்கள் வௌியேற்றப்படுகின்றன. முதிர்ச்சி அடையாத குறை வளர்ச்சி வெற்ற முளைப்பு திறன் அற்ற சிறு விதைகள் அகற்றப்படுகின்றன. உயர்தரமான சுத்தமான விதைகள் உறுதி செய்யப்படுகின்றன.

விதைகள் ஆய்வு செய்வதோடு இல்லாமல் விதைகளை வெவ்வேறு சேமிப்பு கொள்கலன்களில் வைக்கும்போது அதனுடைய சேமிப்பு திறன் மற்றும் முளைப்பு திறன் எவ்வாறு மாறுபடுகிறது என்பதனை ஒவ்வொரு விதைகளுக்கும் தனித்தனியாக அறியப்படுகிறது.இப்படி தொடர்ந்து விதைகளை சேகரித்து அவற்றை குறித்து ஆராய்ந்து ஒவ்வொரு வருடத்திற்கும் என்று சுமார் 25 டன் விதைகள் இந்த மையம் மூலம் சேகரிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தகுந்த விலையில் விநியோகிக்கப்படுகிறது.

தற்போதும் 200க்கும் அதிகமான பல்வேறு விதைகள் இங்கு நல்ல முளைப்புத் திறனுடன் தயார் நிலையில் உள்ளது. இவை அனைத்தும் பல இடங்களில் சேகரிக்கப்பட்டு, பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, நல்ல வளர்ச்சியை தரும் மரங்களின் விதைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் இந்த விதை மையத்தினை முழுமையாக பயன்படுத்திட வேண்டும் என்றும், மரத்தின் மீது ஆர்வம் உள்ளவர்கள் இந்த விதை மையத்தினை பயன்படுத்திகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: