ஆபரேஷன் புதுவாழ்வு திட்டத்தில் சேலத்தில் 175 பிச்சைக்காரர்களை மீட்டு மறுவாழ்வு

*கவனிக்காத பிள்ளைகளுக்கு கடும் எச்சரிக்கை

*போலீசாரின் நடவடிக்கைக்கு குவியும் பாராட்டு

சேலம் : சேலம் மாவட்டத்தில் ஆபரேஷன் புதுவாழ்வு திட்டத்தில், 2 நாட்களில் 175 பிச்சைக்காரர்களை போலீசார் மீட்டு மறுவாழ்வு அளித்துள்ளனர். இவர்களை ஆதரவற்றவர்களாக சாலைகளில் சுற்றித்திரிய விட்ட பிள்ளைகளை, போலீசார் கடுமையாக எச்சரித்தனர். தமிழகம் முழுவதும் நகர்ப்புறங்களிலும், கோயில்கள் முன்பும் ஆதரவற்ற நிலையில் பிச்சை எடுப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இவர்களில் சிலரை ஆள்கடத்தல் கும்பல், தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்து பிச்சை எடுக்க வைத்துள்ளதாக புகார்கள் எழுந்தது. இப்புகாரின் பேரில், மாநிலம் முழுவதும் ஆபரேஷன் புதுவாழ்வு என்னும் திட்டத்தின் கீழ், பிச்சைக்காரர்களை மீட்டு, அவர்களின் பின்புலத்தை அறிவதோடு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என, அனைத்து மாவட்ட போலீசாருக்கும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இந்த மீட்பு நடவடிக்கையின் போது, பிச்சைக்காரர்களின் பின்புலத்தில் ஆள்கடத்தல் கும்பல் இருந்தால், அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

இதன்பேரில், கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில், மாநிலம் முழுவதும் ஆபரேஷன் புதுவாழ்வு திட்டத்தில், முக்கிய சாலைகள், சிக்னல்கள், கடைவீதிகள், கோயில்களின் முன்பு பிச்சை எடுத்து வந்த நபர்களை மீட்டு போலீசார் விசாரித்தனர். அதில், உறவுகள் இருந்தும் ஆதரவற்றவர்களாக சாலைகளில் சுற்றித்திரிந்து பிச்சை எடுத்தவர்களை, மீண்டும் அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்று, பிள்ளைகளுக்கு அறிவுரை கூறியும், கடும் எச்சரிக்கை விடுத்தும் அவர்களை கவனிக்கச் செய்தனர்.

 சேலம் மாவட்டத்தில் எஸ்பி அபிநவ் மேற்பார்வையில், சேலம் ரூரல், ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, வாழப்பாடி, ஆத்தூர் ஆகிய 6 உட்கோட்டங்களிலும், அந்தந்த டிஎஸ்பிக்கள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் களமிறங்கி, தீவிர மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இதில், ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் 122 பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டனர். ஆத்தூர், மேட்டூர், ஓமலூர் ஆகிய 3 உட்கோட்டத்தில் தலா 26 பேரும், சங்ககிரியில் 20 பேரும், வாழப்பாடியில் 15 பேரும், சேலம் ரூரலில் 12 பேரும் மீட்கப்பட்டு, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. சேலம் மாநகரில் கடந்த 3ம் ேததி 21 பேரும், 4ம் தேதி 32 பேரும் என  53 பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டனர். ஆதரவற்றவர்களாக இருந்த இவர்களில் 48 பேரை, அரசு ஆதரவற்றோர் இல்லத்திலும், 5 பேரை தனியார் தொண்டு நிறுவனத்திலும் போலீசார் சேர்த்தனர்.

 போலீசாரின் விசாரணையில், பிச்சைக்காரர்களின் பின்புலத்தில் ஆள்கடத்தல் கும்பல் ஏதும் இல்லை எனத்தெரியவந்தது. பெரும்பாலானவர்கள், வீட்டில் இருந்து பிள்ளைகள், உறவினர்களால் துரத்தி விடப்பட்டவர்கள். அவர்களிடம் போலீசார் ஆறுதலாக பேசி, வீட்டு முகவரியை பெற்று நேரடியாக அவர்களை அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்களிடம், குடும்பம் குறித்த புரிதலை ஏற்படுத்தி, இனிமேல் பெற்றோரை நல்ல முறையில் கவனிக்க வேண்டும். சாப்பாடு கொடுக்க வேண்டும், என அறிவுறுத்தினர். வரும் நாட்களில், மீண்டும் இதே நபர் சாலையில் பிச்சை எடுப்பதை கண்டறிந்தால், குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

 ஒருசில இடங்களில் குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு, பெண்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மீட்டு,  அக்குழந்தை அவர்களுடையது தானா? அல்லது வாடகைக்கு எடுத்து வந்து பிச்சை எடுக்க செய்தார்களா? என விசாரித்தனர். அதில், குழந்தையுடன் சிக்கிய சுமார் 15 பேரும் அவர்களின் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு பிச்சை எடுத்தும், வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் இப்படி செய்வதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களிடம் ஏதேனும் வேலைக்கு சென்று, வாழ்வாதாரத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், உறவினர்களின் உதவியை பெற்றுத்தருவதாகவும் கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.

 சேலம் மாவட்டத்தில் மீட்கப்பட்ட 122 பேரில், 10 பேர் மட்டும் ஆதரவற்றவர்களாக இருந்தனர். அவர்களை தொண்டு நிறுவன ஆதரவற்றோர் இல்லங்களில், போலீசார் ஒப்படைத்தனர். வெளியூர்களில் இருந்து வந்து பிச்சை எடுத்து வந்த 20 பேரை, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்து, உறவினர்களிடம் பேசி வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்தனர். போலீசாரின் இத்தகைய நடவடிக்கையை, தொண்டு நிறுவனத்தார் மற்றும் தன்னார்வலர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

இது பற்றி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆபரேஷன் புதுவாழ்வு திட்டத்தில், தமிழகத்திலேயே சேலம் மாவட்டத்தில் இரண்டாவது அதிகபட்சமாக 175 பேரை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளோம். அதிகபட்சமாக தாம்பரத்தில் 207 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சேலத்தில் மீட்கப்பட்ட பிச்சைக்காரர்களின் பின்புலத்தில் ஆள்கடத்தல் கும்பல் யாரும் இல்லை எனத்தெரியவந்தது. யாரேனும் குழந்தைகளை வாடகைக்கு எடுத்தும், முதியவர்களை ஊனமாக்கியும் பிச்சை எடுக்கச் செய்தால், அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.

Related Stories: