போலீஸ்காரருக்கு மிரட்டல்: பாஜ நிர்வாகி கைது

காங்கயம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலிருந்து காங்கயம் நோக்கி அரசு பஸ் ஒன்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்று கொண்டிருந்தது. இதில் பாஜ தெற்கு மாவட்ட செயலாளர் ராஜா, காங்கயம் போலீஸ்காரர் ரமேஷ் உட்பட பலர் பயணித்தனர். அந்த பஸ்சில்  ஒருவர், ஒரு பெண்ணின் காலை தெரியாமல் மிதித்துவிட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸ்காரர் ரமேஷ் அந்த நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது.

இதை பார்த்த பாஜ தெற்கு மாவட்ட செயலாளர் ராஜா பொதுமக்களிடம் இப்படி நடந்து கொள்ளலாமா? என்று கேட்டு போலீஸ்காரரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் ரமேஷ் மற்றும் பாஜ நிர்வாகி ராஜா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மீண்டும் இருவருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது பாஜ நிர்வாகி ராஜா, பணியில் இருந்த போலீஸ்காரரை ஒருமையில் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் போலீஸ் அதிகாரிகள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பாஜ நிர்வாகிக்கும், போலீஸ்காரருக்கும் இடையிலான வாக்குவாத வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று புகாரின் பேரில் காங்கயம் போலீசார் பாஜ தெற்கு மாவட்ட செயலாளர் ராஜா மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

Related Stories: