பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் ஜி - 20 மாநாடு பற்றிய விளக்க கூட்டத்தில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடக்கும் ஜி - 20 மாநாடு பற்றிய விளக்க கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். கடந்த 1ம் தேதி ஜி - 20 அமைப்புக்கு தலைமை வகிக்கும் பொறுப்பை இந்தியா ஏற்றது. ஜி - 20 மாநாடு டெல்லியில் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஜி - 20 மாநாட்டை சிறப்பாக நடத்த அனைத்துக்கட்சி தலைவர்களின் விளக்க கூட்டத்துக்கு ஒன்றிய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ஜி - 20 மாநாடு தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி இன்று அனைத்துக்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். குடியரசு தலைவர் மாளிகையில் இன்று மாலை நடக்கும் ஆலோசனையில் பங்கேற்க 40 கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்கிறார். ஜி - 20 மாநாடு நடக்கும் நகரங்களை புதுப்பொலிவுடன் மாற்ற, வெளிநாட்டு பிரதிநிதிகளை வரவேற்பது பற்றி ஆலோசனை நடைபெறவுள்ளது. ஜி - 20 மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஜி - 20 மாநாடு பற்றிய விளக்க கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். இன்று நடக்கும் விளக்க கூட்டத்தில் பங்கேற்க விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.

Related Stories: