பல ஆண்டாக சாலை வசதி இல்லாமல் மயானத்திற்கு வயல்வெளிகளில் செல்லும் அவலம்; புதிய சாலை அமைக்க வலியுறுத்தல்

திருவாடானை: திருவாடானை அருகே பாகனூர் பகுதியில் 35க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். இந்த பகுதியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மயானம் அமைக்கப்பட்டு ஆதிதிராவிட மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் அந்த மயானத்திற்கு இதுநாள் வரை சாலை வசதி செய்து கொடுக்கவில்லையென கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் எவரேனும் ஒருவர் இறந்தால் கூட அந்த மயானத்திற்கு தூக்கிச் செல்வதற்கு அப்பகுதியில் உள்ள வயல்வெளிகளின் வழியாகத் தான் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் மிகவும் சிரமப்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அந்த மயானத்திற்கு புதிய சாலை அமைத்துத்தரக் கோரி கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், திருவாடானை வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகிய அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி காலத்தில் இந்த மயானத்திற்கு புதிய சாலை வசதி செய்து தர எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென கூறப்படுகிறது. நேற்று திடீரென மாரடைப்பால் அப்பகுதியில் வசிக்கும் சுரேஷ்(42) என்பவர் இறந்து விட்டார். இறந்தவரின் உடலை உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள மயானத்திற்கு வயல்வெளிகளின் வழியாக தூக்கிச் சென்று மயானத்தில் அடக்கம் செய்துள்ளனர். மேலும் இந்த மயானத்திற்கு சாலை வசதி செய்து கொடுக்கப்படாததால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் கோடை காலங்களில் கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதியில் இறந்த உடல்களை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள வயல்வெளிகளைத் தாண்டி அந்த மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளதாகவும் கூறுகின்றனர். அப்பகுதியில் விவசாய காலக்கட்டங்களில் வயல்வெளிகளில் நெல் சாகுபடி செய்யப்படுவதால், அதன் வழியாக பயிர்களை சேதப்படுத்தி விட்டு உடலை மயானத்திற்கு உறவினர்கள் தூக்கிச் செல்லும்போது அந்த நில உரிமையாளர்களுக்கும், இறந்தவரின் உறவினர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்படும் சூழல் நிலவுகிறது.. ஆகையால் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு இந்த மயானத்திற்கு புதிய சாலை வசதி அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்பகுதியை சேர்ந்த கணேசன் கூறுகையில்: எங்களது பகுதியில் வசிக்கும் மக்களுக்காக சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மயானம் அமைக்கப்பட்டுள்ளது. எங்களது பகுதியைச் சேர்ந்த எவரேனும் ஒருவர் உயிரிழந்தால் கூட அந்த மயானத்திற்கு தூக்கி சென்று அடக்கம் செய்வது வழக்கம். அவ்வாறு மயானத்திற்கு பிரேதத்தை தூக்கிச் செல்லும்போது சாலைவசதி இல்லாததால் இந்த விவசாய நிலங்களின் வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் விவசாய கால கட்டங்களில் விளைநிலங்களின் வழியாக உடலை தூக்கி செல்லும் போது அந்த நில உரிமையாளர்களுக்கும், இறந்தவரின் உறவினர்களுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு மோதல் போக்கை உண்டாக்கும் சூழல் நிலவ வாய்ப்புள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். மேலும் எங்களது பகுதியில் உள்ள மயானத்திற்கு புதிய சாலை வசதி அமைத்து தரக்கோரி கலெக்டர் உட்பட அனைத்து அதிகாரிகளிடமும் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி காலத்தில் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இதே நிலை நீடிக்கிறது. ஆகையால் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு எங்கள் பகுதியில் உள்ள மயானத்திற்கு புதிய சாலை வசதி செய்து தர வேண்டுமெனக் கூறினார்.

Related Stories: