தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஜனாதிபதி, ஆளுநரிடம் 66 மசோதா தேக்கம்: ஒப்புதல் அளிக்காததால் அரசியல் தலைவர்கள் அதிருப்தி

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட 66 சட்ட மசோதாக்கள் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோரின் ஒப்புதலுக்காக அனுப்பியும், இதுவரை அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கடந்த முறை ஆட்சியில் இருந்து அதிமுக மற்றும் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள திமுக ஆகிய அரசுகள் பொதுமக்கள் நலன் மற்றும் முக்கியத்துவம் கருதி, பல்வேறு சட்ட மசோதாக்களை சட்டப் பேரவையில் இயற்றி ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளன. ஆனால் அவற்றின் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மேற்கண்ட ஆளுநரும், குடியரசுத் தலைவரும் அமைதி காத்து வருகின்றனர்.

தேர்தல் மூலம் பொதுமக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலம் சட்டப் பேரவையில் கொண்டு வரப்படும் மசோதாக்கள், அவையில் விவாதிக்கப்பட்டு இறுதியாக அந்த மசோதாவுக்கு சட்டப் பேரவையில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒப்புதல் வாக்களித்த பிறகே அந்த மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும். அதற்கு பிறகு அந்த மசோதாக்கள் மாநில ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களின் ஒப்புதலுக்கு பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்படி தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 14 மசோதாக்களும், திமுக ஆட்சியில் 53 சட்ட மசோதாக்களும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதுபற்றி ஆளுநர் அலட்டிக் கொள்ளாமல் அமைதி காத்து  வருகிறார். அதிமுக  ஆட்சியின் போது, கொண்டு வரப்பட்ட மசோதாக்கள் மற்றும் சட்டத் திருத்தங்களை பொருத்தவரையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை சிறையில் இருந்து விடுவிப்பது தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானம் கடந்த 2018ம் ஆண்டு கொண்டு  வரப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழை ஒரு பாடமாக வைப்பது குறித்து 2020ல் கொண்டு  வரப்பட்ட மசோதா, 2021ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்ட திருத்த மசோதா 2021ல் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு முனிசிபல் சட்டங்கள் திருத்த மசோதா 2021ல் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத் திருத்த மசோதா, ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான மசோதா, தமிழ்நாடு பொருள் மற்றும் சேவைகள் வரி சட்டத் திருத்த மசோதா, அண்ணாமலை பல்கலைக் கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழக சட்டத்திருத்த மசோதா, இந்திய தண்டனை சட்டத்  திருத்த மசோதா 2021, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர்  ஆணைய சட்டத்திருத்த மசோதா 2021, கல்வி நிறுவனங்களில் சேர்க்கையில் மிகவும் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் சீர்மரபினருக்கான இட ஒதுக்கீட்டு மசோதா சட்டமாக்கப்பட்டது.

இதையடுத்து, 2021ம் ஆண்டில் திமுக அரசு கொண்டு வந்த மசோதாக்களில், தமிழ்நாடு முனிசிபல் சட்டங்களில் திருத்த மசோதா, அரசுப் பள்ளி மாணவ மாணவியர் தொழில் கல்வி படிப்பில் சேர முன்னுரிமை அளிக்கும் மசோதா ஆகஸ்ட் 2021ம் தேதி சட்டமாக்கப்படடது. பதிவுத்துறை சட்டத் திருத்த மசோதா, நீதிமன்றக் கட்டணங்கள் சட்ட திருத்தம், தமிழ்நாடு கிளினிக்கல் விரிவாக ஒழுங்குமுறை சட்டத்திருத்தம், தமிழ்நாடு பல்கலைக் கழகங்களின் சட்டத்திருத்த மசோதா, தமிழ்நாடு கடைகள் மற்றும் விரிவாக்க சட்டத்  திருத்த மசோதா, தொழிலாளர் நல நிதி சட்டத் திருத்தம், தமிழ்நாடு ஜிஎஸ்டி இரண்டாவது திருத்த மசோதா, தமிழ்நாடு பணியாளர் ஒழுங்குமுறை சட்டத் திருத்தம், தொழில்களுக்கான நிலம் ஆக்கிரமிப்பு சட்டத்திருத்தம், விவசாய உற்பத்தி சந்தைப் படுத்துதல் ஒழுங்குமுறை சட்டத்திருத்தம், தமிழ்நாடு மாநில எஸ்சி, எஸ்டி ஆணைய மசோதா 2021 செப்டம்பர் மாதம் கொண்டு வரப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

மேலும், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழக இரண்டாவதுசட்டத் திருத்த மசோதா, தமிழ்நாடு மாவட்ட முனிசிபாலிட்டிகள் சட்டத் திருத்த மசோதா, தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை இரண்டாவது சட்டத் திருத்த மசோதா, நீட் தேர்வுக்கு எதிரான மசோதா, பாரதியார் பல்கலைக் கழக சட்ட திருத்த மசோதா, சம்பளம் ஒழுங்குமுறை மசோதா, விவசாய விளைபொருள் விற்பனை ஒழுங்குமுறை மசோதா, முனிசிபல் சட்டங்கள் திருத்த மசோதா (மூன்றாவது), சித்த மருத்துவபல்கலைக் கழகம் தொடங்குவது தொடர்பான மசோதா, கும்பகோணம் கார்பரேஷன், தாம்பரம், சிவகாசி, காஞ்சிபுரம், கடலூர், ஆகியவை கார்ப்பரேஷன்களாக மாற்றும்  மசோதா 2022 ஜனவரி மாதம் சட்டமாக்கப்பட்டது. தமிழ்நாடு நகர திட்ட சட்டத்  திருத்த மசோதா, சென்னை மாநகர போலீசில் ஆவடி, தாம்பரம் ஆகியவற்றை இணைப்பது தொடர்பான மசோதா 2022 ஜனவரியில் சட்டமாக்கப்பட்டது; அரசுப் பணியாளர் தேர்வாணையம் மசோதா 2022 ஜனவரியில் சட்டமாக்கப்பட்டது.

சட்டப் பல்கலைக் கழக மசோதா 2022, கூட்டுறவு சங்கங்கள் சட்டத் திருத்த மசோதா 2022, மாநில சட்ட ஆணையம் கொண்டு வந்துள்ள பரிந்துரைகளை அடுத்து சிலவற்றை திரும்ப பெறும் மசோதா 2022, மீன்வளத்துறை, கால்நடைப் பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பான மசோதா 2022, பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் குழுவு நியமனம் தொடர்பான மசோதா 2022, உள்ளிட்ட 66 மசோதாக்கள் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோரின் ஒப்புதலுக்காக காத்துக் கிடக்கின்றன. மேற்கண்ட மசோதாக்களுக்கான ஒப்புதலை குடியரசு தலைவரும், ஆளுநரும் விரைந்து வழங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

Related Stories: