அகல ரயில் பாதை பணிகள் நிறைவு; போடி - தேனிக்கு சோதனை ஓட்டம்: 120 கிமீ வேகத்தில் இன்ஜின் இயக்கம்

தேனி: அகல ரயில் பாதை பணிகள் நிறைவடைந்ததையடுத்து, போடி - தேனிக்கு நேற்று அதிவேக ரயில் இன்ஜின்  மணிக்கு 120 கிமீ வேகத்தில் ஓட்டி சோதனையிடப்பட்டது. தேனி மாவட்டம், போடியில் இருந்து மதுரை வரை இயக்கப்பட்ட மீட்டர்கேஜ் ரயிலானது, அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2010, டிச. 31ம் தேதி ரயில் சேவை நிறுத்தப்பட்டது.  

ரூ.506 கோடி மதிப்பீட்டில் மதுரையில் இருந்து போடி வரையிலான ரயில்வே பணிகள் நடந்தன. இதில் மதுரையில் இருந்து தேனி வரை  பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த மே 27ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ரயில் சேவையை  துவக்கி வைத்தார். அதன்பின், கடந்த மே 28ம் தேதி முதல் 10 பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

தேனியில் இருந்து போடி ரயில் நிலையம் வரையிலான  15 கிமீ அகல ரயில் பாதை பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்த புதிய ரயில் பாதையில் ஏற்கனவே ரயில் இன்ஜின் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது.  நேற்று போடி - தேனி புதிய அகல ரயில் பாதையில் 120 கிமீ வேகத்தில் ரயில் இன்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.  

போடியில்  நேற்று மதியம் 12.43க்கு புறப்பட்ட ரயில் இன்ஜின், தேனிக்கு 9 நிமிடங்கள் 20 நொடியில் வந்து சேர்ந்தது. தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவு துணை முதன்மை பொறியாளர் சூரிய மூர்த்தி, உதவி பொறியாளர் சரவணன் ஆகியோர் சோதனை ரயில் ஓட்டத்தை ஆய்வு செய்தனர். முன்னதாக போடி ரயில் நிலையத்தில் ரயில் இன்ஜினுக்கு பூஜை நடத்தப்பட்டு ரயில் புறப்பட்டது. அதிகவேக ரயில் இன்ஜின் புறப்படுவதை காண ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

Related Stories: