தேன்கனிக்கோட்டை அருகே சண்டையிட்டதில் பெண் யானை பலி: உரிகம் வனப்பகுதியில் காயங்களுடன் மீட்பு

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட காவேரி தெற்கு வன உயிரின சரணாலயம், உரிகம் வனச்சரகத்தில் உன்பேச்சிகொல்லை சரகத்தில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதுபற்றி வனத்துறையினர் ஓசூர் வனக்கோட்ட உயிரின காப்பாளர் கார்த்திகேயனிக்கு தகவல் தெரிவித்தனர்.

அவரது தலைமையில் நேற்று தர்மபுரி மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமி தலைமையில், ஓசூர் வனக்கோட்ட உயிரின காப்பாளர் கார்த்திகேயனி, உதவி வனப்பாதுகாவலர் ராஜமாரியப்பன், கென்தத் ஆண்டர்சன், நேச்சர் சொசைட்டி தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த வினய், உரிகம் வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

யானையின் உடலை ஓசூர் வனக்கோட்ட வன கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் உடற்கூராய்வு செய்தனர். அதில், யானையின் வயது 36 முதல் 38 இருக்கலாம் எனவும், உடலின் வெளிப்பகுதியில் காயங்கள் காணப்பட்டதும் தெரிய வந்தது. 2 யானைகளுக்கு இடையிலான சண்டையில் காயமடைந்து பெண் யானை உயிரிழந்திருக்கலாம் என உடற்கூராய்வில் தெரிய வந்தது.

இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உரிகம் வனச்சரகத்தில் தற்போது 70 யானைகள் உள்ளதால், அவற்றின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். எனவே, காப்பு காடுகளை சுற்றியுள்ள பொதுமக்கள், விவசாயிகள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: