சேலம் ஜங்ஷன் யார்டு பகுதியில் ரயில் பாதை முழுமையாக மாற்றியமைப்பு: இன்று மாலைக்குள் பணியை முடிக்க தீவிரம்

சேலம்: சேலம் ஜங்ஷன் ரயில்ேவ ஸ்டேஷன் யார்டு பகுதியில் ரயில் போக்குவரத்தை சீர்படுத்த பாதை முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியை இன்று மாலைக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம்-மேட்டூர் அணை இருவழிப்பாதை திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதில், மேட்டூர் அணை-ஓமலூர் வரை இருவழிப்பாதை திட்டம் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் நிறைவு பெற்றது. அப்பாதையை மின்வழித்தடமாகவும் மாற்றி ரயில் ேசாதனை ஓட்டம் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.

இத்திட்டத்தில் ஓமலூர்-சேலம் ஜங்ஷன் வரையிலான பகுதியில் இருவழிப்பாதை அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் யார்டு பகுதியில் ரயில் போக்குவரத்தை சீர்படுத்தும் வகையில் தண்டவாளத்தை முழுவதுமாக மாற்றியமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தொடங்கிய இப்பணி இன்று மாலை வரை நடக்கிறது. இதன்காரணமாக 25க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், 30க்கும் மேற்பட்ட ரயில்கள் பல்வேறு மாற்றங்களுடனும் இயக்கப்படுகிறது.

யார்டு பகுதியில் தற்போது இருக்கும் தண்டவாளத்தில், பாதை மாறுவதற்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன. அதனால், சில ரயில்களை ஸ்டேஷனில் கூடுதல் நேரம் நிறுத்தி வைக்க வேண்டிய சூழலும் உள்ளது. இவை அனைத்தையும் களைந்து, புதிய யார்டுகளை ரயில்வே பொறியியல் பிரிவு அமைக்கிறது. இதன்மூலம் ஈரோட்டில் இருந்து வரும் சரக்கு ரயில், நேரடியாக ஜோலார்பேட்ைட மார்க்கத்தில் இயக்க வழிவகை செய்யப்படுகிறது.

பாதை மாற்றத்தை திறம்பட மேம்படுத்துவதன் மூலம் இனிமேல் ரயில் போக்குவரத்து எளிமையாக்கப்படுகிறது. ரயில்கள் தாமதமின்றி, விரைந்து இயக்கப்படும். ஜோலார்பேட்ைட மார்க்கம், பெங்களூரு மார்க்கம், ஈரோடு மார்க்கம், நாமக்கல் மார்க்கம் என 4 புறங்களில் இருந்து வரும் ரயில்களும், எவ்வித சிரமமும் இன்றி சீரானமுறையில் இயக்கிட ஏற்பாடு செய்யப்படுகிறது.

அதேபோல், சேலம் ரயில்வே ஸ்டேஷன் 6வது பிளாட்பார்மில் சரக்கு ரயில்கள் நிறுத்தப்பட்டு, சரக்குகள் இறக்கப்படுகிறது. அந்த பிளாட்பார்ம்மின் நீளத்தை அதிகரிக்கும் பணியும் இத்துடன் செய்யப்படுகிறது. அதாவது கூடுதலாக 21 ரயில் பெட்டிகள் நிற்கும் வகையில், அந்த பிளாட்பார்ம் நீளமாக மாற்றியமைக்கப்படுகிறது. இதன்மூலம் சரக்கு கையாள்வதில் இருந்த பிரச்னை தீர்த்து வைக்கப்படுகிறது. சேலம் யார்டில் நடக்கும் இப்பணியை இன்று (2ம் தேதி) மாலைக்குள் முடிக்க பொறியியல் பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.இதற்காக இடைவிடாது தண்டவாளங்களை பெயர்த்து எடுத்து, புதிதாக பாதை அமைத்து சீர்படுத்தி வருகின்றனர். இன்று மாலைக்குள் இப்பணியை முழுமையாக முடித்து விடுவோம் என கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

டவுனில் இருந்து  விருத்தாச்சலம் ரயில்

சேலம் ஜங்ஷன் யார்டில் சீரமைப்பு பணி நடப்பதால், சேலம்-விருத்தாச்சலம் ரயில் இருமார்க்கத்திலும் நேற்று, சேலம் டவுன் ரயில் ஸ்டேஷனில் இருந்து இயக்கப்பட்டது. நேற்று காலை விருத்தாச்சலத்தில் இருந்து வந்த ரயில், டவுனில் நிறுத்தப்பட்டது. அதிலிருந்து நூற்றுக்கணக்கான பயணிகள் இறங்கி, பஸ், ஆட்டோக்களில் சென்றனர். இன்றைய தினமும் சேலம்-விருத்தாச்சலம் ரயில், சேலம் டவுனில் இருந்து இயக்கப்படுகிறது.

Related Stories: