வலிமையான இந்தியாவை உருவாக்க குஜராத்தில் பாஜக ஆட்சியில் இருக்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு..!

அகமதாபாத்: வலிமையான இந்தியாவை உருவாக்க குஜராத்தில் பாஜக ஆட்சியில் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வரும் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடந்த காலங்களில் இருமுனைப் போட்டி நிலவியது. ஆனால், இந்த முறை நடைபெறும் சட்டப் பேரவை தேர்தலில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்கி உள்ளதால், மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் முதற்கட்டமாக 89 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 25,430 வாக்குப்பதிவு மையங்களில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 93 தொகுதிகளில் வரும் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கான பிரசாரம் வரும் 3ம் தேதியுடன் (நாளை மறுநாள்) ஓய்கிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் இன்று ஆமதாபாத் நகரில் துவங்கி சாந்த்ஹிடா, ஹீராவாடி, ஹாட்கீஸ்வர், மணி நகர், தாலினிமாடா, ஜிவ்ராஜ் பார்க் என முக்கிய நகரங்கள் வழியாக 50 கி.மீ. தொலைவிற்கு 3 மணி நேரம் பிரதமர் மோடி பிரம்மாண்ட பேரணி நடத்தினார். வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கானோர் பிரதமரை வரவேற்றனர். இதனிடையே சபர்கந்தா மாவட்டத்தில் பேரணியில் ஈடுபட்ட போது பேசிய பிரதமர் மோடி; இந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆட்சியில் இருக்கப் போகிறார்கள் என்பதற்கான தேர்தல் மட்டும் கிடையாது.

இந்தியா 75 சுதந்திர தினத்தை நிறைவு செய்துள்ளது. 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாட இன்னும் 25 ஆண்டுகள் உள்ளன. இந்தத் தேர்தலில் ஆட்சி அமைப்பது என்பது அடுத்த 25 ஆண்டுகளுக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான தேர்தல். சர்தார் படேல் முதல் பிரதமராக இருந்திருந்தால் நாடு வேறு ஒரு திசையில் பயணித்திருக்கும் என அனைவரும் கூறுகின்றனர். நாங்கள் முன்பே இருந்தவர்கள் செய்த தவறை திருத்தும் முயற்சியை ஏற்கனவே தொடங்கி விட்டோம். அதற்கான கடின முயற்சியில் இறங்கியுள்ளோம் என்றார். நாடு 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது வலிமையான இந்தியாவை உருவாக்க குஜராத்தில் பாஜக ஆட்சியில் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

Related Stories: