கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அருப்புக்கோட்டையில் பொதுமக்கள் தீக்குளிக்க முயற்சி: போலீசார் குவிப்பு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மணி நகரில் கோயிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிமக்கள் தீக்குளிக்க முயன்றனர். அவர்களுடன், அதிகாரிகள் மற்றும் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பதற்றத்தை தடுக்க 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மணி நகரம் உச்சி செட்டி தெருவில் சந்தன மாரியம்மன் கோயில் உள்ளது. 30 வருடங்களுக்கு முன்பு இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கோயில் இடையூறாக உள்ளது என தனிநபர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, கோயிலை இடிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து அருப்புக்கோட்டை நகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் அலுவலர்கள் கோயிலை அகற்றுவதற்கு இன்று காலை அங்கு வந்தனர். இதற்கு அப்பகுதிமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்து வந்த அருப்புக்கோட்டை ஏஎஸ்பி தருண் ஹாரட், திருச்சுழி டிஎஸ்பி ஜெகநாதன், திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன், அருப்புக்கோட்டை தாசில்தார் அறிவழகன், டவுன் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், கிரேஷ் சோபியா பாய் மற்றும் அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவர், திடீரென கோயில் அருகே உள்ள கட்டிடத்தில் ஏறி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். மேலும் அப்பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பெண்களும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், அவர்களை தடுத்தி நிறுத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

தொடர்ந்து கோயிலை அகற்றுவது தொடர்பாக அப்பகுதிமக்களிடம், அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.   அசம்பாவிதம் நடைபெறுவதை தடுக்க அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: