சென்னையில் 179 இடங்களில் போதை எதிர்ப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம்

சென்னை: சென்னையில் 179 இடங்களில் போதை எதிர்ப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், சென்னையிலுள்ள 151 பள்ளிகள், 4 கல்லூரிகள் மற்றும் 24 பொது இடங்கள் என மொத்தம் 179 இடங்களில் போதை எதிர்ப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 11.08.2022 அன்று “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற திட்டத்தை துவக்கி வைத்து, தமிழகத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க உத்தரவிட்டதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், போதை ஒழிப்பு குறித்து, காவல்துறை சார்பில் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக, 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் ரீதியான தொந்தரவுகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும், பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (Protection of Childrens from Sexual Offences Act-2012) குறித்தும் பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகள், அறியும் வண்ணம் அவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், நேற்று (30.11.2022) சென்னையிலுள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் “போதை பொருள் எதிர்ப்பு குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும்‘‘ விழிப்புணர்வு முகாம்கள் நடத்த உத்தரவிட்டார்.

அதன்பேரில், காவல் உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர்கள் நேற்று (30.11.2022) சென்னை பெருநகரிலுள்ள 151 பள்ளிகள், 4 கல்லூரிகள் மற்றும் 24 பொது இடங்கள் என மொத்தம் 179 இடங்களில் போதைப் பொருள் எதிர்ப்பும், அதன் தீமைகள் குறித்தும், போக்சோ சட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது.

இம்முகாம்களில் 10,842 பள்ளி மாணவ, மாணவிகள், 691  கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் 667  பொதுமக்கள் என மொத்தம் 12,200 நபர்கள் கலந்து கொண்டு, காவல்துறையின் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை கேட்டறிந்தும், தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவடைந்தனர். சென்னை பெருநகர காவல் குழுவினரின் போதைப் பொருள் எதிர்ப்பு குறித்தும், போக்சோ சட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: