முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு; டெண்டர் முறைகேடு வழக்கு மட்டும் ரத்து

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகளின் விசாரணை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.எம்.டி.டீக்காராமன் அமர்வில் நடைபெற்றது.

அப்போது எஸ்.பி.வேலுமணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.வி.ராஜு, வழக்கறிஞர் ஜெ.கருப்பையா ஆகியோர் ஆஜராகினர். எஸ்.வி.ராஜு வாதிடும்போது, ‘‘மனுதாரருக்கு எதிரான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி.பொன்னி அளித்த அறிக்கைக்கு ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக அரசும் 2020ம் ஆண்டு ஜனவரியில் இந்த வழக்கு தொடர்பான நடவடிக்கையை கைவிடுவது என்று முடிவு எடுத்தது. பணிகளை செயல்படுத்தியது தொடர்பான மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது ’’ என்று வாதிட்டார்.

வேலுமணிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் சித்தார்தவே, வழக்கறிஞர் இளங்கோவன் ஆகியோர் ஆஜராகி தேர்தல் ஆணையத்தில் வேலுமணி தாக்கல் செய்த சொத்து மதிப்பின் அடிப்படையிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் வழக்கு பதிவு செய்தது விதிமுறைகளுக்கு முரணானது என்று வாதிட்டனர். ‘‘அப்போது, புகார்தாரரான அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமாக ஏராளமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

மற்றொரு புகார்தாரரான திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, புலன் விசாரணை அதிகாரியின் விசாரணை முடிவின் அடிப்படையில்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பதை தடுக்கும் வகையில், நிறுவனங்களின் ஆண்டு வருமானம் 10 கோடி ரூபாய் என்பதை 20 கோடியாக மாற்றி அமைத்துள்ளனர் என்று வாதிட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு: உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி. பொன்னி தாக்கல் செய்த அறிக்கை அடிப்படையில் முந்தைய அரசு இந்த வழக்கை கைவிடுவது என்று முடிவெடுத்த நிலையில், ஆட்சி மாற்றத்துக்கு பின் அந்த அரசின் முடிவை ரத்து செய்யும் அதிகாரம் இருந்தபோதிலும், அந்த முடிவை ரத்து செய்யவில்லை. அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் மற்றும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரின் புகார்களை பார்க்கும்போது டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பது தெளிவாக தெரிகிறது. ஆனால், அமைச்சர் என்ற முறையில் டெண்டரை பரிசீலித்து முடிவெடுத்தார் என்பது அவர்களது புகாரோ, வழக்கோ இல்லை.

இரு புகார்களிலும் மாநகராட்சி தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்கள் தான் டெண்டர் வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சகோதரர்களுக்கும், பினாமிகளுக்கும் டெண்டர் ஒதுக்கப்பட்டதாக கூறுவதால் மட்டும், அமைச்சர் வேலுமணியை வழக்கில் சேர்க்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. அரசியல்வாதிகள் எல்லாம் ஊழல்வாதிகள் என்கிற பொது கருத்து நிலவுகிறது. ஒரு பொது கருத்தின் அடிப்படையில் அரசியல்வாதிக்கு எதிராகவோ அல்லது சாதாரண குடிமகனுக்கு எதிராகவோ வழக்கு தொடர முடியாது.

ஜனநாயகத்தில் அரசியல்வாதிகளை தவிர்த்துவிட முடியாது. ஆனால் அதிகாரத்தில் உள்ள அரசியல்கட்சிகள் எதிர்க்கட்சிகளை வேட்டையாட அனுமதிக்க முடியாது. முந்தைய ஆட்சியில் எஸ்.பி.பொன்னி அளித்த அறிக்கையில், ‘வழக்கில் முகாந்திரம் இல்லை’ என தெரிவித்த நிலையில், ஆட்சி மாற்றத்துக்கு பிறகு கங்காதர் அளித்த அறிக்கையில் வேலுமணியும் சேர்க்கப்பட்டுள்ளார். ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய கட்சிகளின் இசைக்கு ஏற்ப நடனமாடக்கூடிய வேலையைத்தான் காவல்துறையினர் செய்கிறார்கள் என்பது இந்த வழக்கில் தெளிவாக தெரிகிறது. அதனால் வேலுமணிக்கு நற்சான்று வழங்குவதற்காக இந்த நீதிமன்றம் இல்லை.

ஆட்சி மாற்றத்துக்கு பிறகு விசாரித்த கங்காதர் நேரடியாக வழக்குப்பதிவு செய்யாமல், வேலுமணியை வழக்கில் சேர்க்கும் வகையில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தி அறிக்கை அளித்து, அதனடிப்படையில் உடனடியாக வழக்கு பதிவு செய்தது ஏன். வேலுமணிக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து முறையாக ஆரம்பகட்ட விசாரணை நடத்தி இருந்தால், இந்த வழக்குப் பதிவை நியாயப்படுத்தி இருக்க முடியும். ஆனால், தாமாக முன்வந்து இந்த வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதிலும், இந்த ஊழல் முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகளை கண்டறியவில்லை.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுக்களில் டெண்டர் ஒதுக்கீடு முறை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் டெண்டர் ஒதுக்கீடு, பரிசீலனை என எதிலும் வேலுமணிக்கு எந்த பங்கும் இல்லை என்று தெரியவந்துள்ளது. முதல் தகவல் அறிகையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பொறுத்தவரையில், தற்போதைய நிலையில் விசாரிக்க உரிய முகாந்திரம் இல்லை என்று நீதிமன்றம் கூறவில்லை. வேலுமணிக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மட்டும் முகாந்திரம் இல்லை.

காவல்துறை தனது அதிகாரத்தை ஒரு சாராருக்கு ஆதரவாக பயன்படுத்தும்போது நீதிமன்றத்தால் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதிகாரிகள் தவறால் முறைகேடு நடக்கவில்லை. மாறாக வேலுமணி தலையீட்டால் தான் முறைகேடு நடந்துள்ளது என்று லஞ்ச ஒழிப்புத் துறை நிரூபித்திருந்தால் வேலுமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுக்க எந்த தயக்கமும் இல்லை.  வழக்கில் சம்மந்தபட்ட அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைக்கு முன்பே அரசிடம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு விசாரணை நடத்தும்போது வேலுமணி செல்வாக்கை செலுத்தி இருப்பது கண்டறியப்பட்டால் அவர் மீது வழக்கு பதிவு செய்திருக்கலாம்.

ஆனால் அவ்வாறு செய்யாமல் வழக்குப் பதிவு செய்தது காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகம்தான். எனவே, டெண்டர் முறைகேடு வழக்கில் வேலுமணி மீதான வழக்கை மட்டும் ரத்து செய்கிறோம். அதேசமயம் வழக்கின் புலன்விசாரணை அதிகாரி தனது விசாரணையை தொடரலாம். அதில் வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டால், குற்றப்பத்திரிகையில் அவரை சேர்க்கலாம். கடந்த 2016, 2021ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் வேலுமணி தாக்கல் செய்த சொத்து கணக்குகளின் அடிப்படையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

இந்த சொத்துக்களுக்கு அவரிடம் விளக்கம் கேட்ட பிறகுதான் வழக்குப்பதிவு செய்ய முடியும் என்கிற வேலுமணி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என்பதால் இந்த வழக்கில் தலையிட எவ்வித காரணமும் இல்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. காவல்துறையினரை அரசியல் மற்றும் அரசு தலையீடு இருக்கக்கூடாது என்கிற உச்ச நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படாததால் அரசியல் கட்சியினருக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் காவல் நிலைய உயர் அதிகாரிகள் போல நீதிமன்றங்கள் செயல்பட வேண்டி உள்ளது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: