11 குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து தலைமை நீதிபதி அமர்வில் பில்கிஸ் பானு முறையீடு: உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை..!

டெல்லி: குஜராத் கலவரத்தின் போது கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானோ உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்த நடந்த வன்முறையில் பில்கிஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணி கூட்டு பலாத்கார செய்யப்பட்டார்.

அவரது 3 வயது மகள் உட்பட குடும்பத்தினர் 7 பேர் வன்முறை கும்பலால் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடந்த 15ம் தேதி இந்த 11 பேரையும் பொது மன்னிப்பு வழங்கி குஜராத் அரசு விடுதலை செய்தது. குற்றவாளிகள் 14 ஆண்டு சிறை தண்டனை நிறைவு செய்ததால் விடுதலை குறித்து குஜராத் மாநில அரசு ஒரு குழுவை அமைத்து 11 பேர் விடுதலை குறித்து முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியது. இதனை அடுத்து 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

குழுவினர் அனைவரும் ஒருமனதாக குற்றவாளிகளை விடுதலை செய்யலாம் என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலைக்கு மூலகாரணமாக அமைந்தது குஜராத் அரசே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியது தான். எனவே உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு சீராய்வு செய்யப்பட வேண்டும் என்று பில்கிஸ் பானு தனது மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: