போக்குவரத்து நெரிசலை குறைக்க மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.175.80 கோடியில் புதிய மேம்பாலம்: 3 மாதங்களில் பணி துவங்குகிறது

மதுரை: மதுரை கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.175.80 கோடி திட்ட மதிப்பீட்டில் 3.2. கி.மீ தூரத்திற்கு பாலம் கட்டப்படவுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இது இறுதியானதும் 3 மாதங்களில் பணி துவங்குகிறது. மதுரை நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளது.

எனவே முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதியமேம்பாலங்கள் குறிப்பாக, கோரிப்பாளையத்திலும் மற்றும் சிம்மக்கல்லில் இருந்து பெரியார் பஸ் நிலையத்திற்கு செல்வதற்கும் புதிய உயர்மட்ட மேம்பாலங்கள் கட்ட கடந்த 2009ல் திமுக ஆட்சியில் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்கு அனுமதி வழங்கப்பட்டு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்ட நிலையில், 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

இதன்பின்பு ரூ.110 கோடி மதிப்பீட்டில், பனகல் சாலை, பாலம் ஸ்டேஷன் ரோடு, கோரிப்பாளையம், ஏ.வி. பாலம் ஆகிய நான்கு வழியாக பிரிந்து செல்லும் வகையில் பாலம் வடிவமைக்கப்பட்டது. இதற்கு மண் பரிசோதனை 2013ல் நடந்தது. ஆனால், அதன்பின்பு 2020 வரை அப்பணி கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, கோரிப்பாளையம் பாலம் கட்ட புதிய வடிவமைப்பில், திட்டம் தயாரிக்கப்பட்டது.

மதுரை கோரிப்பாளையத்தில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பணி தீவிரமடைந்தது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் நடந்த வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன. அதனைத்தொடர்ந்து தற்போது நிலம் கையகப்படுத்தி இழப்பீடு வழங்குவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இப்பாலம் பணிக்காக 39 பேரின் இடங்கள் மொத்தம் 92 சென்ட் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இந்த நிலத் தின் மார்க்கெட் மதிப்பு, கட்டிட இடிபாடு. நஷ்டம் ஆகியவற்றை கணக்கீட்டு, மொத்தம் ரூ.44 கோடி இழப்பீட்டு தொகையாக வழங்கப்படவுள்ளது. இதற்காக நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு இழப்பீடு வழங்கும் பணி நடைபெறவுள்ளது.

இதற்கிடையே கோரிப்பாளையம் புதிய மேம்பாலத்திற்கு திட்ட மதிப்பீடு ரூ.175.80 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பாலம், அழகர்கோவில் ரோடு மாநகராட்சி அலுவலகம் எதிரே மாநகராட்சி எக்கோ பார்க் அருகே பாலம் துவங்குகிறது. இப்பாலம் தமுக்கம், கோரிப்பாளையம் தேவர் சிலை சந்திப்பு அருகே தாழ்வாக செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. அங்கிருந்து ஏ.வி.பாலம் அருகே இணையான மற்றொரு தனிப்பாலம் துவங்கி, நெல்பேட்டை அண்ணா சிலையில் முடியும். பீ.பீ.குளத்தில் இருந்து வரும் வாகனங்களுக்காக தமுக்கம் நேரு சிலை அருகே துணைப்பாலம், செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு நோக்கிச் செல்ல தேவர் சிலை அருகே தாழ்வாக மற்றொரு துணைப்பாலம் அமைக்கப்பட உள்ளது. மேலும் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் வழிப்பாதை பாலமாக அமைக்கப்பட உள்ளது.

இந்த பாலம் மொத்தம் 3.2 கி.மீ நீளத்தித்திற்கும், 12 மீ.அகலத்தில் பாலம் அமைக்கப்படவுள்ளது. தற்போது இப்பாலத்திற்காக ரூ.175.80 கோடியில் அமைக்க நெடுஞ்சாலைத்துறை டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டதும் 3 மாதங்களில் பணி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: