காசி தமிழ் சங்கமத்தில் தென்காசி கோயில் வித்வான் தம்பதி பங்கேற்பு

தென்காசி: காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்கும் கோயில் பணியாளர்களுக்கு தென்காசியில் வழியனுப்பு விழா நடந்தது. உத்தரபிரதேசத்தின் காசிக்கும் (வாரணாசிக்கும்), தமிழகத்துக்கும் இடையே நீண்டகால பாரம்பரிய, கலாசார தொடர்பு உள்ளது. இதை புதுப்பிக்கும் நோக்கில் வாரணாசியில் ஒரு மாத காலத்துக்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதனால் வாரணாசி களைகட்டிய நிலையில் தமிழகத்தில் இருந்து தேர்வாகும் பல்வேறு பிரதிநிதிகள் இந்த விழாவில் பங்கேற்று வருகின்றனர்.

அந்த வகையில் தெற்கே உள்ள காசி என அழைக்கப்படும் தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் நாதஸ்வர வித்வானாகவும், அலுவலக உதவியாளராகவும் 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி ஓய்வு பெற்ற கனகசபாபதி, முத்துசாமி தம்பதியினரை காசி தமிழ் சங்கமத்தில் கவுரவிக்கும் பொருட்டு ஒன்றிய அரசால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் காசிக்கு புறப்பட்டு செல்வதையொட்டி தென்காசியில் வழியனுப்பும்  விழா நடந்தது. பாஜ தொழில் துறை பிரிவு மாநில செயலாளர் மகாதேவன், நகரத் தலைவர் மந்திரமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் ராமநாதன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் கருப்பசாமி, மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார், கவுன்சிலர்கள் லட்சுமணப்பெருமாள், சங்கரசுப்பிரமணியன், தொழிற்சங்க மாவட்டத் தலைவர் சிவக்குமார், நகர தலைவர் சரவணன், நகர பொருளாளர் மாரியப்பன், 30வது வார்டு தலைவர் பழனி மற்றும் பக்தர்கள், தமிழ் ஆர்வலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: