உண்மையை சொல்ல மறுக்கிறார்!: கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்ந்தது..ஐகோர்ட் கிளை அதிரடி

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்ந்தது. சிசிடிவி பதிவில் கோகுல்ராஜுடன் இருப்பது நான் அல்ல என்று ஏற்கனவே சுவாதி சாட்சியம் அளித்துள்ளார். மாஜிஸ்திரேட் முன் கொடுத்த வாக்குமூலத்தை மாற்றி உயர்நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்ததால் சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் வழக்கு கடந்த 2015ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம், யூவராஜ் உட்பட 10 நபர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி யுவராஜ் தரப்பிலும், தண்டனையை உறுதிப்படுத்தக்கோரி கோகுல்ராஜ் தாயார் தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், சிறப்பு அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படும் கோகுல்ராஜின் தோழி சுவாதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும், அவரிடம் முக்கிய கேள்விகள் எழுப்பப்பட வேண்டும், ஏன் அவர் பிறழ் சாட்சியாக மாறினார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தனர். அதன் அடிப்படையில் கடந்த 25ம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவாதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அன்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கும், காண்பிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளுக்கும் கோகுல்ராஜுடன் இருப்பது நான் அல்ல என்று சுவாதி தெளிவாக கூற மறுத்துவிட்டார். அதுமட்டுமின்றி சுவாதி பேசியதாக வெளியிடப்பட்ட ஆடியோவில், அது எனது குரல் இல்லை என தெளிவாக கூறினார். இதனால் கோபமடைந்த நீதிபதிகள், உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தருகிறோம்; நீதிமன்றத்தில் உண்மையை கூறுங்கள் என கூறி இன்று (30.11.22) ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்திருந்தனர். இந்த வழக்கு 10.40 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சுவாதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கீழமை நீதிமன்றம் தெளிவாக வழக்கு விசாரணை மேற்கொண்டது. எனவே குறுக்கு விசாரணை என்ற அடிப்படையில் சுவாதியிடம் கேள்விகளை எழுப்ப வேண்டாம் என்று ஆட்சேபனை தெரிவித்தனர். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், சுவாதியிடம் கடந்த முறை நீங்கள் அளித்த வாக்குமூலத்தில் உறுதியாக உள்ளீர்களா? என்று மீண்டும் கேள்வி எழுப்பினர். அதற்கு கடந்த 25ம் தேதி தான் கொடுத்த பிறழ் சாட்சியத்தில் உறுதியாக இருப்பதாக சுவாதி தெரிவித்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்ந்தது:

இதனால் கோபமடைந்த நீதிபதிகள், சிசிடிவி காட்சிகளை காண்பித்தும் சுவாதி முறையாக பதில் அளிக்கவில்லை, உண்மையை சொல்ல மறுக்கிறார். சிசிடிவியில் இருப்பது சுவாதி என சரியாக தெரிகிறது, இருந்தும் அது நான் இல்லை என சுவாதி கூறிவிட்டார். சுவாதிக்கு ஏதோ ஒரு பக்கத்தில் இருந்து அழுத்தம் வருகிறது. ஒருவர் பொய் சாட்சி வழங்கி அதை நீதிமன்றம் கடந்து சென்றால் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துவிடும்.

நீதிமன்றத்தில் தவறான சாட்சியம் அளித்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம். எனவே பிறழ் சாட்சியம் அளித்த சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக தெரிவித்தனர். மாஜிஸ்திரேட் முன் கொடுத்த வாக்குமூலத்தை மாற்றி உயர்நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்ததால் சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: