கடமலை - மயிலை ஒன்றியத்தில் இலவம் பிஞ்சுகள் விற்பனை சீசன் தொடக்கம்: கொள்முதல் விலை குறைவு விவசாயிகள் வேதனை

வருசநாடு: கடமலை - மயிலை ஒன்றியத்தில் இலவம் பிஞ்சுகள் விற்பனை தொடங்கியுள்ளது. ஆனால் மொத்த வியாபாரிகளின் கொள்முதல் விலை குறைவால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கடமலை - மயிலை ஒன்றியத்தில் இலவம் பிஞ்சு சீசன் தொடங்கி உள்ளது. இதனால் ஓட்டணை, கோவிலாங்குளம், வருசநாடு, தங்கம்மாள்புரம், தும்மக்குண்டு, வாலிப்பாறை, சிங்கராஜபுரம், முருக்கோடை, மணலாற்று குடிசை, ராயர்கோட்டை, வண்டியூர், வீரசின்னம்மாள்புரம், காந்திகிராமம், காமராஜபுரம், அரசரடி, குமணன்தொழு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் வவ்வால்களில் தொல்லை இரவு நேரங்களில் அதிகரித்துள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் விவசாயிகள் இரவு நேரங்களில் இலவமரங்கள் உள்ள தங்கள் தோட்டங்களில் காவலுக்கு செல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இலவ மரங்களில் இருக்கும் பிஞ்சுகளை வவ்வால்கள் சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

இதனை தடுக்க சில விவசாயிகள் பட்டாசு வெடித்து வவ்வால்களின் வருகையை தடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இலவசம் பிஞ்சுகள் உருவாகும் நேரத்தில் இப்பகுதிக்கு வரும் வவ்வால்கள்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதன்படி ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான வவ்வால்கள் கூட்டம், கூட்டமாக வந்து சேர்வதால் இப்பகுதிகளில் அவை இலவம் பிஞ்சுகளை கடித்து சாப்பிடுவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பலத்த சேதம் ஏற்படுகிறது. இதுகுறித்து வருசநாடு பகுதி விவசாயிகள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் வவ்வால்கள் கார்த்திகை, மார்கழி, தை என மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து இலவம் பிஞ்சுகளுக்குத் தொல்லை கொடுத்து வருகிறது. இதனால் விளைச்சல் மிகவும் பாதிப்படைகிறது. இதன் காரணமாக பலரும் இலவம் விவசாயத்தை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில் கடமலை மயிலை ஒன்றியத்திலுள்ள இலவம் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். இலவம் விவசாயம் குறித்து விவசாயி ரமேஷ் கூறுகையில், தற்போது ஒரு கிலோ இலவம் பிஞ்சுகள் ரூ. 85 முதல் 100 வரை விலை போகிறது. கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.300 வரை விற்பனையானது. இந்நிலையில் மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் எங்களிடம் இருந்து இலவம் பிஞ்சுகளை அதிக அளவில் வாங்கிச் செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இருந்தபோதிலும் இலவம் பிஞ்சு விவசாயத்தை ஊக்குவிக்க மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்றார். இதேபோல் மயிலாடும்பாறை பகுதியில் பல்வேறு கிராமங்களிலும் இலவம் விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தற்போது இலவம் பிஞ்சு சீசன் களை கட்டத்தொடங்கியுள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக இலவம் பிஞ்சு உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மேலும் விலை கிலோ ரூ.100 வரை விற்பனையாகி வருகிறது. இதனால் விவசாயிகள் இலவம் பிஞ்சுகளை மரத்திலிருந்து பறித்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இருப்பு வைத்திருந்த இலவம் பிஞ்சுகளின் விலை தொடர்ந்து படிப்படியாக உயர்ந்து வருகிறது. தற்போது இலவம் பிஞ்சு கிலோ ரூ.100 முதல் 115 வரை மட்டுமே விற்பனை ஆகிறது. இதனால் கடந்த ஆண்டு சேகரித்து உலர்த்திய இலவம் பிஞ்சுகளின் விலை குறைவால் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர், இப்பகுதிகளில் இருந்து குறைந்த விலையில் இலவம் பிஞ்சு மற்றும் பஞ்சினை வாங்கி, குடோன்களில் பதுக்கி வைத்து குறிப்பிட்ட இடைவெளிக்கு பின் அதிக விலைக்கு விற்பனை செய்து இடைத்தரகர்கள் அதிக லாபமடைந்து வருகின்றனர். எனவே வருடம் முழுவதும் கடுமையாக உழைக்கும் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையில் இலவம் பிஞ்சு மற்றும் பஞ்சுவிற்கு மாவட்ட நிர்வாகம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள்‌ கோரியுள்ளனர்.

Related Stories: