ஆன்லைன் ரம்மி என்பது ஒரு நோய், அதை ஒழிக்கவே பாடுபட்டு வருகிறோம்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்தவுடன் சட்ட நடைமுறைக்கு வரும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் காலாவதியானது குறித்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், 95 சதவீதம் மக்கள் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர். ஆளுநரை கேள்வி கேட்க எங்களுக்கு உரிமையில்லை, அவர் கேள்வி கேட்டால் பதிலளிக்கும் உரிமைதான் உள்ளது.

ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக அனைத்து விதமான பதில்களையும் ஆளுநரிடம் தமிழ்நாடு அரசு அளித்துள்ளது. புதிய மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால் ஆன்லைன் ரம்மி தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியும். ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஏன் காலதாமதப்படுகிறார் என்பது தெரியவில்லை; அதற்கான காரணம் ஆளுநருக்குதான் தெரியும். ஆன்லைன் ரம்மியால் இனி ஏற்படும் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்.

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டாலும் தற்போது நடைமுறையில் உள்ள பிற சட்டங்களின்படி முடிவுக்கு கொண்டுவருவோம். ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கான நோக்கம் மசோதாவின் முகப்புரையிலேயே தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி, நோய் என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி என்பது ஒரு நோய், அதை ஒழிக்கவே பாடுபட்டு வருகிறோம் என குறிப்பிட்டார்.

Related Stories: