போக்குவரத்து நெரிசலை குறைக்க ராமேஸ்வரம் நகரில் ஒரு வழிப்பாதை திட்டம்-சுற்றுலா பயணிகள்,பொதுமக்கள் வலியுறுத்தல்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நகருக்குள் ஒருவழிப் பாதை வழித்தடங்களை செயல்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேசிய சுற்றுலா தலமாகவும், புண்ணிய ஸ்தலமாவும் விளங்கி வரும் ராமேஸ்வரத்திற்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு தீர்த்த மாடி சுவாமி தரிசனம் செய்வதற்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளியிடங்களில் இருந்து வரும் இவர்களின் வாகனங்கள் ராமேஸ்வரத்தில் அனைத்து இடங்களுக்கும் சென்று திரும்பும் நிலையில் நகருக்குள் நாள் முழுவதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடம் செல்ல நீண்டநேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இந்நிலையை தவிர்க்க ராமேஸ்வரம் நகருக்குள் ஒருவழிப் பாதை வழித்தடங்களை செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

ராமேஸ்வரத்திற்கு வெளியூர்களில் இருந்து வரும் ஏராளமான வாகனங்கள் ஒரு நாளில் நகருக்குள் உள்ள சாலைகளில் குறைந்தது நான்கு ஐந்து முறைகளாவது செல்ல வேண்டியுள்ளது. இவற்றுடன் உள்ளூர் வாசிகளின் இருசக்கர வாகனம், கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் சாலைகளில் ஓடுகிறது. இதனால் நகரிலுள்ள அனைத்து சாலைகளிலும் அடிக்கடி போக்குவரத்து தடை ஏற்படுவதால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், ரயில் பேருந்து நிலையம் செல்பவர்கள், சொந்த வாகனங்களில் வெளியூர் செல்ல வேண்டியவர்கள் என பல தரப்பினரும் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

மேலும் வாகனங்களுக்கு இடையில் கட்டுமான பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள், மீன் லாரிகள், டிராக்டர்கள் போன்ற கனரக வாகனங்கள் சாலையில் நாள் முழுவதும் ஓடுவதும், சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுவதாலும் விபத்துகளும் ஏற்படுகிறது. இதனால் மக்கள் குடியிருக்கும் குறுகிய தெருச்சாலைகளில் இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படுவதுடன், பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து செல்லும் நிலையில் உள்ளனர்.

ராமேஸ்வரத்தில் 1980களிலேயே ஒருவழிப் பாதை வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு போக்குவரத்து போலீசாரின் கண்காணிப்புடன் நகருக்குள் வாகனங்கள் ஓடியது. அந்த நேரத்தில் ராமேஸ்வரம் நகரில் நகர் பேருந்துகள், 50க்கும் குறைவான ஆட்டோ மற்றும் ஜீப்கள், ஒரு சில டிராக்டர்கள், நூற்றுக்கும் குறைவான இருசக்கர வாகனங்கள் மட்டுமே இருந்தது. மேலும் குதிரை வண்டிகள், சைக்கிள் ரிக்க்ஷாக்களும் பயன்பாட்டில் இருந்தது. குறைந்த எண்ணிக்கையில் வாகனங்கள் இருந்த போதிலும் அகலம் குறைந்த சாலைகளாக இருந்ததால் நகரில் கிழக்கு கடைத்தெரு புதுத்தெரு உள்ளிட்ட பகுதிகள் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு வாகனங்கள் சென்று வந்தது.

மேலும், திட்டகுடி நான்கு ரோடு சந்திப்பு, மேற்கு கோபுர வாயில், கிழக்கு கோபுர வாயில், கடைத்தெரு - கிழக்கு கடைத்தெரு சந்திக்கும் இடம், சித்தி விநாயகர் கோயில் தெரு - புதுத்தெரு சந்திக்கும் இடம், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ரயில் நிலைய சாலை துவங்கும் இடங்களில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு போடப்பட்டது. ஒரு வழிப்பாதையில் சைக்கிளில் சென்றால் கூட போலீசார் அபராதம் விதித்தனர்.

ஆனால் தற்போது நாள்தோறும் நகருக்குள் உலா வரும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஒருவழிப் பாதை திட்டத்தை செயல்படுத்த முடியாமலும், வாகனப் போக்குவரத்தை சீர்படுத்த முடியாமலும் போலீசார் திணறுகின்றனர்.ராமேஸ்வரத்தில் அனைத்து இடங்களுக்கும் சென்று திரும்பும் பிரதான சாலைகளாக ராமேஸ்வரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை, நடுத்தெரு, மேற்கு வாசல் முதல் சம்பை, மாங்காடு சாலை, கெந்தமாதன பர்வதம் சாலை விளங்குகிறதுமேலும் கிழக்கு கடைத்தெரு சாலை, மார்க்கெட் தெரு சாலை உள்ளிட்ட பல நகராட்சி சாலைகளிலும் வாகனங்கள் செல்ல வேண்டிய கட்டாய சூழலும் உள்ளது.

இது போக தற்போது ஏகப்பட்ட கிளை சாலைகளும் அனைத்து வாகன போக்குவரத்துக்கும் வாகன ஓட்டிகளால் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பிரதானமாக, அதிக வாகன போக்குவரத்து உள்ள சாலைகளில் எதனை ஒருவழிப் பாதையாக மாற்றினால் சரியாக இருக்கும் என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து இதனை செயல்படுத்திட வேண்டும். ராமேஸ்வரம் நகரில் வாழும் உள்ளூர்வாசிகள், வெளியூ சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மேற்கண்ட கோரிக்கையை நடைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ராமேஸ்வரம் நகரில் திட்டகுடி நான்கு ரோடு சந்திப்பு வாகன போக்குவரத்து முக்கிய பகுதியாக உள்ளது. இந்த இடத்தினை மையப்படுத்தி தான் அனைத்து வாகனங்களும் தங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு போக முடியும். இந்த இடத்தில் எந்தவொரு பகுதியில் போக்குவரத்து குளறுபடி ஏற்பட்டாலும் அனைத்து சாலைகளிலும் நீண்ட நேரம் போக்குவரத்து தடை ஏற்படும்.

இந்த இடம் உட்பட தேவையான இடங்களில் தானியங்கி சிக்னல் சாதனம் மற்றும் கண்காணிப்பு கேமராக்களை அமைத்து சீரான போக்குவரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

 ராமேஸ்வரம் நகர் பிரதான சாலைகள் உட்பட நகராட்சி சாலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேவையான இடங்களில் வாகனங்கள் நிறுத்த தடை விதித்து நடவடிக்கை எடுத்தாலே வாகனங்கள் தடையின்றி செல்வதில் பாதி பிரச்சனை சரியாகிவிடும்.தற்போது நான்குரத வீதியில் வாகனங்கள் செல்ல தடை இருந்தாலும் கோயில் மேற்கு ரத வீதியில் வாகனங்கள் சென்று திரும்புவது தவிர்க்க இயலாததாக உள்ளது. இதனால் ராமேஸ்வரம் தெற்கு ரதவீதி கடற்கரை யோரத்தில் கடற்கரைசாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த முன்வரவேண்டும்.

சாலை பணியை முடிக்க வேண்டும்

ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ராமேஸ்வரம் நகரை சுற்றி வடக்கு பகுதியில் அமையவுள்ள சுற்றுச்சாலை, பாம்பன் முதல் தனுஷ்கோடி வரையிலான நான்கு வழிச்சாலை திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த வேண்டும். இவைகள் செயல்வடிவம் பெற்றால் ராமேஸ்வரம் நகருக்குள் வாகனங்கள் போக்குவரத்து மேம்படும்.

பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய இரு வழித்தட ரயில் பாலம் 2023ல் திறக்கப்பட வுள்ள நிலையில் மேலும் பல நீண்ட தூர ரயில்கள் ராமேஸ்வரத்திற்கு இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இங்கு வரும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வாகனங்களின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ராமேஸ்வரம் நகருக்குள் மேலும் வாகன போக்குவரத்து நெருக்கடி அதிகரிக்கும் என்பதால் அதற்கேற்றாற் போல் ஒருவழிப்பாதை வாகன போக்குவரத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.

Related Stories: