மறைந்து போகாத நாட்டுப்புற வழக்கம் மழை வேண்டி கொடும்பாவி எரித்து வழிபாடு-விவசாயிகள் மொட்டை அடித்து பூஜை

செய்துங்கநல்லூர் : தூத்துக்குடி பகுதியில் போதியளவு மழை பெய்யாததால் செக்காரக்குடியில் கிராம மக்கள் ஒன்று கூடி கொடும்பாவி எரித்து வழிபட்டனர்.கிராமப்புற மக்களின் அடிப்படைத் தொழில் வேளாண்மையாகும். வேளாண் பயிர்கள் வளர மழை அவசியம். அதுவும் குறித்த காலத்தில் மழை பெய்தால்தான் பலன் பெற முடியும். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, கயத்தாறு,  எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளம் தாலுகாக்களில் சுமார் 1 லட்சத்து 70  ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.  இதில் உளுந்து, கம்பு, வரகு, கேழ்வரகு, மக்காச்சோளம்., பருத்தி மற்றும்  மிளகாய் உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது.

பெரும்பாலும் இந்த பகுதிகளில்  வடகிழக்கு பருவ மழையை நம்பியே அதிகளவு சாகுபடி நடக்கிறது. இந்த ஆண்டு ஒருமாதம்  கடந்த நிலையில் தென்மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யாததால் விவசாயிகள்  கவலை அடைந்துள்ளனர். எதிர்பார்த்த அளவு மழை   பெய்யாததால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. போதிய மழையில்லாத காலங்களில் மழை பொழிய வேண்டி நாட்டுப்புற மக்களால் பல்வேறு சடங்குகள் இன்றளவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி வைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட செக்காரக்குடியில் கிராம மக்கள் மழைச்சடங்கு நடத்த முடிவு செய்தனர்.

இதற்காக ஊர் மக்கள், விவசாயிகள், ஊராட்சி தலைவர், பெரியவர்கள் ஒன்றுகூடி மழை வேண்டி கொடும்பாவி எரித்து ஒப்பாரி வைத்து வழிபட முடிவு செய்தனர். நேற்று முன்தினம் பொதுமக்கள் தங்களால் இயன்ற சிறு தொகையை வழங்கி கொடும்பாவி உருவபொம்மை தயார் செய்தனர். அதனை கரகாட்டம், நையாண்டி மேளம், சகிதமாக ஆண்களும், பெண்களும் இணைந்து ஒப்பாரி பாடியபடி ஊர் முழுவதும் சுற்றி வந்து சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று எரித்தனர். தொடர்ந்து கிராமத்து அம்மன் கோயிலில் விவசாயிகள் வழிபட்டு மொட்டை அடித்துக் கொண்டனர். வரும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் கோயிலில் கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இறவை பாசன  விவசாயத்தை விட மானாவாரி விவசாயமே அதிகளவில் நடக்கிறது. சித்திரை மாதம்  கோடை உழவு ஓட்டி மழைக்காக காத்திருந்தோம். ஆவணி மாதத்தில் ஒரு மழையும்  புரட்டாசியில் ஒரு மழையும் மட்டுமே பெய்தது. ஆவணி மழையை நம்பி சில  பகுதிகளில் விதைத்தோம். ஆனால் அவை பயிராகவில்லை.

தற்போது பருவமழையும்  தாமதமாவதால் கவலையடைந்துள்ளோம். கிராமப்புறங்களில் மழைச்சடங்காக  கஞ்சி வழிபாடு, தவளை திருமணம், கழுதை திருமணம், கொடும்பாவி எரிப்பு  போன்றவை இடம்பெறும்., அதில் கடந்த வாரம் நடந்த ஊர் கூட்டத்தில் கொடும்பாவி  எரித்து வழிபட தீர்மானிக்கப்பட்டது. அதன்படி ஊருக்கு நடுவே கொடும்பாவி  தயார் செய்து, ஒப்பாரி பாடியபடி தெருத்தெருவாக  இழுத்துச் செல்லப்பட்ட கொடும்பாவியை கிராம மக்கள் அடித்தனர். பின்னர்  ஊருக்கு வெளியே கொடும்பாவியை எரித்தோம். இதனால் விரைவில் மழை வரும் என்று  நம்புகிறோம் என்றனர்.

மழை வேண்டி பாடல்

மழை வேண்டி கிராம மக்கள் பாடிய பாடலில், வானத்து  ராசாவே, மழை பெய்யும் புண்ணியரே, சோழ மக்கள் எல்லாம் சோத்துக்கு  வாடுகிறோம், ஆதி மூலப்பெருமாளே அருள்புரிய வேண்டுமய்யா, பாண்டிய மக்கள்  எல்லாம் பசியோடு வாடுகிறோம், மாரியம்மன் தாயாரே மானத்தை காக்க  வேண்டுகிறோம் என பாடலை பாடினர்.

Related Stories: