குஜராத் தேர்தல் அறிக்கையில் இலவசங்களை வாக்குறுதியாக அள்ளி வீசிய பாஜக; சைக்கிள், இ-ஸ்கூட்டர், சிலிண்டர் என வாக்குத்திகள் நீள்கின்றன..!

சூரத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் வரும் டிச. 1ம் தேதி நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன. இதனிடையே பாரதிய ஜனதா கட்சி 40 முக்கிய வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளது.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இதனை வெளியிட்டார். அதில்; கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும். 9-12 வகுப்பு வரை அனைத்து மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்படும். வயதான பெண்களுக்கு இலவசமாகபேருந்தில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும்.  பெண்களுக்காக மட்டுமே அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். குஜராத் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

குஜராத் ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றப்படும். மீன்பிடித் தொழிலுக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நீர்பாசான வசதிகளை அதிகரிக்க 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும், இரண்டு கடல் உணவு பூங்காக்கள் அமைக்கப்படும். பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா (ஆயுஷ்மான் பாரத்) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக இரட்டிப்பாக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 20,000 அரசுப் பள்ளிகளை சிறந்த பள்ளிகளாக மாற்றப்படும்.

2036ல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நோக்கத்துடன் குஜராத் ஒலிம்பிக் மிஷனைத் தொடங்கவும், உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு உட்கட்டமைப்பை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தொழிலாளர்களுக்கு 2 லட்சம் வரை பிணையில்லாத கடன் வழங்குவதற்கான ஷ்ராமிக் கிரெடிட் கார்டுகள் வழங்கப்படும். காந்திநகர் மற்றும் சூரத் மெட்ரோ வழித்தடங்களை முடித்து, ராஜ்கோட் மற்றும் வதோதரா ஆகிய இடங்களில்  மெட்ரோ ரயில் சேவையை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: