ரயில்வே தரைப்பாலங்களில் தண்ணீர் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமம்

விருதுநகர்: விருதுநகர் வழியாக செல்லும் செங்கோட்டை ரயில்தடம், நெல்லை வழித்தடம், மானாமதுரை ரயில் தடங்களில் உள்ள ரயில்வே தரைப்பாலங்கள் அனைத்திலும் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். விருதுநகரை ஒட்டிய கூரைக்குண்டு ரயில்வே தரைப்பாலம், பேராலி ரயில்வே தரைப்பாலம், நாகம்பட்டி ரயில்வே தரைப்பாலம், பாலவனத்தம்-கோவிலாங்குளம் ரயில்வே தரைப்பாலம், மீசலூர் ரயில்வே தரைப்பாலங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.

கிராமங்களுக்கு செல்லும் பஸ் சேவை, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் என அனைவரும் மழைநீரில் இறங்கி செல்ல வேண்டிய  நிலை தொடர்கிறது. மழைக்காலங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை இல்லை. தாதம்பட்டியில் இருந்து மீசலூர் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் விவசாய நிலங்களுக்கும், கிராமத்திற்கும் மக்கள் சென்று வர முடியாமல் சிரமப்படுகின்றனர்.

மேலும் ரயில் தரைப்பாலங்களுக்கு அருகில் கண்மாய், கிணறுகள் இருப்பதால் அவற்றில் இருந்தும் ரயில்வே பாலங்களில் ஊற்று எடுக்கும் நிலையும் தொடர்கிறது. ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ரயில்வே தரைப்பாலங்களில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற மோட்டார் பொருத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: