பெரம்பலூர் அருகே விபத்து ஐயப்ப பக்தர்கள் 14 பேர் படுகாயம்-ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே லாரி மீது, வேன் மோதியதில் சபரிமலையில் இருந்து திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேர் படுகாயமடைந்தனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வைரபுரம் ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்த அன்பழகன் மனைவி சுலோச்சனா. இவரது குடும்பத்தினர் 14 பேர், சுற்றுலா வேனில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சபரிமலையில் இருந்து நேற்றுமுன்தினம் திண்டிவனத்துக்கு புறப்பட்டு வந்தனர். வேனை அதே பகுதியை சேர்ந்த ராஜா ஓட்டி சென்றார்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அடுத்த செங்குணம் பிரிவு ரோடு பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 11.45 மணியளவில் வேன் வந்தது. அப்போது முன்னால் சென்ற அடையாளம் தெரியாத லாரி, திடீரென சாலையின் வலதுபுறத்தில் இருந்து இடதுபுறம் திரும்பியது. இதனால் வேன் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக ேமாதியது.

இந்த விபத்தில் வேன் டிரைவர் ராஜா (40), சுலோச்சனா (52), குப்பம்மாள்(65), ராஜேஷ்(38), நித்தீஸ்வரன்(12), சண்முகம்(58), தேன்மொழி(55), சாந்தகுமாரி(55), ராஜசேகர்(33), முருகன்(44), சீனிவாசன்(25), விஜயா(58), விஜயலட்சுமி(59), அமுதபாரதி(55) ஆகிய 14 பேர் காயமடைந்தனர். இதையடுத்து 14 பேரும் சிகிச்சைக்காக பெரம்பலூர் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: