தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 1.38 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

*திறந்தவெளி குடோனுக்கு ரூ.13 கோடியில் மேற்கூரை < நெல் மூட்டைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை

 மதுரை : மதுரை மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கடந்தாண்டு ஒரு லட்சத்து 38 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் நேரடியாக அரசு கொள்முதல் செய்துள்ளது. மேலும் மதுரையில் உள்ள திறந்தவெளி குடோனுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.13 கோடியே 20 லட்சத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டு வருகிறது.மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும், ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 730 ஏக்கரில் (59 ஆயிரம் ஹெக்டேர்) நெல் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல்லினை, அவர்கள் விளைநில பகுதிக்கு சென்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.

இதற்காக மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், 150க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்முதல் மையம் அமைக்கப்பட்டு, விவசாயிகள் சாகுபடி செய்த நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதுபோன்று, கொள்முதல் செய்யப்படும் நெல் மதுரை மாவட்டம் கப்பலூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி சேமிப்பு கிட்டங்கிகளில் சேமிக்கப்படுகின்றன. சில நேரங்களில் கனமழையின் காரணமாக திறந்தவெளியில் சேமிக்கப்படும் நெல் மணிகள் மழையில் நனைந்து மூட்டைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.

நெல்மணிகள் மழையில் நனைவதை கருத்திற்கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விவசாயிகள் நலனை உறுதி செய்திடும் நோக்கில் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் நெல்மணிகளை சேமித்திட கூடாது என தமிழக அரசு கொள்கை முடிவாக அறிவித்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பான முறையில் நெல்மணிகளை சேமித்திட ஏதுவாக மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு கிட்டங்கிகள் அமைத்திட உத்தரவிட்டது. இதன்படி மதுரை மாவட்டம் கப்பலூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்த வெளி சேமிப்பு கிட்டங்கியில் மேற்கூரை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ரூ.13.20 கோடி மதிப்பீட்டில் மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார்.

பின்பு கலெக்டர் கூறுகையில், ‘‘தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மதுரை மாவட்டத்தில் சராசரியாக ஆண்டுதோறும். 59 ஆயிரம் ஹெக்டேரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர். விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல்மணிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 143 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நிறுவப்பட்டது. அதன் மூலம், ஒரு லட்சத்து 38 ஆயிரம் மெட்ரிக் டன் அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

திறந்த வெளியில் குடோன் இருப்பதால், மழைக்காலங்களில் நெல்மூடைகள் நினைந்து போக வாய்ப்பு உண்டு. இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசின் உத்தரவுப்படி, திறந்த வெளி குடோனில் மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக தமிழக அரசு ரூ.13 கோடியே 20 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால், தற்போது, 18 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு பகுதியில், மேற்கூரை அமைக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

இத்தகைய சேமிப்பு கிட்டங்கிகள் மூலம் விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல்மணிகளை பாதுகாப்பாக சேமித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், மதுரை மாவட்டத்தில் தேவைக்கேற்ப கூடுதலாக நெல் சேமிப்பு கிட்டங்கிகள் அமைப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மூட்டைக்கு ரூ.40 உயர்த்தி வழங்கல்

விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல்மணிகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம், அரசு நேரடியாக கொள்முதல் செய்கிறது. இதில் 40 கிலோ எடையுள்ள நெல்மணிகள் மூட்டையாக தைக்கப்படுகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.21.60 வீதம், ஒரு மூட்டைக்கு ரூ.864 வீதம் வழங்கப்படுகிறது. இந்தாண்டு மூட்டைக்கு ரூ.40 உயர்த்தி அரசு வழங்கி வருகிறது.

Related Stories: