தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு 1.67 லட்சம் ஹெக்டர் நெல், சிறுதானியங்கள் சாகுபடிக்கு இலக்கு-விவசாயிகளுக்கு ₹176.15 கோடி பயிர்க்கடன்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில், நடப்பாண்டிற்கு 1 லட்சத்து 67 ஆயிரம் ஹெக்டரில் நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 21,907 விவசாயிகளுக்கு ₹176.15 கோடி பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சாந்தி தெரிவித்தார். தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது. இதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசுத்துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் சேருகின்றனர். ஆனால், பிர்க்கா அளவில் பாதிப்பு இருந்தால் மட்டுமே நிவாரணம் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயி பாதிக்கப்பட்டாலும், நிவாரணம் எளிதாக கிடைக்கும் வகையில் காப்பீடு திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். பாப்பிரெட்டிப்பட்டி அருகே பீனி ஆற்றில், தனியார் சேகோ ஆலையின் கழிவுநீர் கலந்து மண், தண்ணீர் கெட்டுப் போய் விட்டது. ஆற்றில் பெரிய குழாய் போட்டு தண்ணீர் உறிஞ்சி எடுக்கின்றனர்.

கரும்பு ஆலைகளில் பதிவு செய்தவர்களுக்கு, சீனியாரிட்டி அடிப்படையில் கரும்பு வெட்டி, ஆலைக்கு எடுத்து செல்ல வேண்டும். கரும்பு பதிவு செய்து வெட்டி எடுத்து செல்வதில், பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அதை சீர்செய்ய வேண்டும். வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில், ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து கொல்கின்றன. இதுபோன்று இறக்கும் ஆடுகளுக்கு, எவ்வித இழப்பீடும் கிடைப்பதில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு குறைகளை விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயிகளில் கேள்விகளுக்கு பதில் அளித்து கலெக்டர் சாந்தி பேசியதாவது:பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் சேகோ ஆலையால் பாதிக்கப்பட்ட மண்வளத்தை மீட்டு எடுக்க, நடவடிக்கை எடுக்கப்படும். ஆலையின் கரும்பு வெட்ட பதிவு மூப்பு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றால், அது என்ன விலங்கு என கண்டறிந்து, நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தர்மபுரி மாவட்டத்தில் கடந்தாண்டு (2021) 1066.50 மி.மீ சராசரி மழையளவு கிடைத்தது. இந்தாண்டு நவம்பர் மாதம் வரை 1077 மி.மீ மழையளவு பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையில், 2022 -2023ம் ஆண்டிற்கு 1 லட்சத்து 67 ஆயிரம் ஹெக்டர் நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள் உள்ளிட்ட உணவு தானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இறவை சாகுபடி 21,578 ஹெக்டேர் பரப்பளவும், மானாவாரி சாகுபடி 1,11,658 ஹெக்டேர் பரப்பளவும் என நவம்பர் வரை மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 236 ஹெக்டர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள் உள்ளிட்ட உணவு தானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் இறவை மற்றும் மானாவாரி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. நடப்பு மாதம் வரை, 350.86 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி சான்று விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 135.01 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி சான்று விதைகள், அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தேவையான சான்று விதைகளை பெற்று பயனடையலாம்.

தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (வரை) சார்பில், கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் 31ம் தேதி வரை,  மாவட்டத்தில் 21,907 விவசாயிகளுக்கு ₹176.15 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் திருந்திய பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், சிறப்பு பருவத்தில் நெல் பயிருக்கும், ராபி பருவத்தில் ராகி, பருத்தி, நிலக்கடலை, மக்காச்சோளம் மற்றும் கரும்பு பயிர்கள் என 24,294.76 ஏக்கர் பரப்பளவிற்கு ₹8,839.15 லட்சத்திற்கு பயிர் காப்பீடு செய்து, ₹133.17 லட்சம் பயிர் காப்பீடு பிரிமீயம் தொகையாக செலுத்தி உள்ளனர். 2016-2017ம் ஆண்டு முதல் 2021-2022ம் ஆண்டு வரை 81,475 ஏக்கர் பரப்பளவிற்கு பயிர் காப்பீடு செய்த 89,377 விவசாயிகளுக்கு ₹4170.71 லட்சம் பயிர் காப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

Related Stories: