ஒன்றிய அரசில் பயன்படுத்தப்படும் 15 ஆண்டு பழைய வாகனங்கள் ஒழிப்பு: உத்தரவில் கையெழுத்திட்டார் கட்கரி

புதுடெல்லி: ஒன்றிய அரசு துறைகளில் 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படும் வாகனங்களை  அழிப்பதற்கான உத்தரவில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கையெழுத்திட்டு உள்ளார். இந்தியாவில் மிக பழைய வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் சுற்றுச்சூழல் மாசு, குறிப்பாக காற்று மாசு அதிகளவில் ஏற்படுகிறது. இதை தடுப்பதற்காக, 15 ஆண்டுகளை கடந்த பழைய வாகனங்களை ஓரம் கட்ட ஒன்றிய அரசு புதிய கொள்கை வகுத்துள்ளது. இந்நிலையில், ஒன்றிய அரசின் அனைத்து துறைகளில் பயன்படுத்தப்படும் 15 ஆண்டுகளை கடந்த பழைய வாகனங்களை ஓரம் கட்ட, ஒன்றிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நடந்த விழாவில் நேற்று அவர் பேசுகையில்,‘ ஒன்றிய அரசால் பயன்படுத்தப்படும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களை அழிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டு உள்ளேன். இது  பற்றி அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. பழைய வாகனங்களை ஒழிக்கும் இந்த கொள்கை முடிவை பின்பற்றும்படி, அவையும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளன. பானிப்பட்டில் புதியதாக தொடங்கப்பட்டு உள்ள 2 இந்திய எண்ணெய் நிறுவன ஆலைகளில்  ஒன்றில், தினமும் ஒரு லட்சம் லிட்டர் எத்தனால் தயாரிக்கப்படுகிறது. நெல் பயிர் கழிவுகளை எரிக்கும் பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், இந்த  திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்,’’ என்றார்.

Related Stories: