2 பொதுத்துறை வங்கிகளில் ஒரு கவுன்டர் மட்டுமே உள்ளதால் வாடிக்கையாளர்கள் அவதி

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி, கண்டிகை பகுதிகளில் உள்ள 2 அரசு பொதுத்துறை வங்கியில் ஒரே ஒரு கவுன்டரில் பணப் பட்டுவாடா பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கூடுவாஞ்சேரி அருகே சாலையோரத்தில் மின்வாரிய அலுவலகம் எதிரே நீண்ட காலமாக வாடகை கட்டிடத்தில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில மாதங்களாக ஒரே ஒரு கவுன்டரில் பணப் பட்டுவாடா பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதேபோல் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை, கண்டிகை பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் 2 கவுன்டர்கள் உள்ளன. எனினும், இங்கு ஒரே ஒரு கவுன்டரில் பணப் பட்டுவாடா பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மேற்கண்ட 2 அரசு பொதுத்துறை வங்கிகளில் பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்கள் மணிக்கணக்கில் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய அவலநிலை நீடித்து வருகிறது. மேலும், இந்த வங்கி கிளைகளின் அருகிலுள்ள ஏடிஎம் மையங்களிலும் பணம் எடுத்தல், போடுதல் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்களில் பதிவிடுதல் உள்பட எவ்வித பணிகளும் முறையாக நடைபெறுவதில்லை. வங்கிக்கு சென்று கேட்டாலும், அவர்கள் கணக்கு விவரங்களை பதிவிட்டு தருவதில்லை.

இதனால் 100 நாள் வேலை செய்யும் பணியாளர்கள், முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகள் பணம் எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். மேலும், புதிய வங்கி கணக்கு துவங்கவும் வங்கி அலுவலர்கள் அலைக்கழித்து வருகின்றனர். எனவே, இப்பிரச்னையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மேற்கண்ட கூடுவாஞ்சேரி, கண்டிகை பகுதிகளில் உள்ள இந்தியன் வங்கி கிளைகளில் கூடுதல் கவுன்டர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பளித்து பணியாற்றுவதற்கு இந்தியன் வங்கி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கி வாடிக்கையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: