மஞ்சூரில் 7 நாளுக்கு பின் கூண்டில் சிக்கிய கரடி முக்குருத்தி தேசிய பூங்கா வனத்தில் விடுவிப்பு

மஞ்சூர்:  மஞ்சூரில் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய கரடி முக்குருத்தி தேசிய பூங்கா வனப்பகுதியில் விடப்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சமீபகாலமாக கரடி நடமாடி வந்தது. பகல் நேரங்களில் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களில் பதுங்கியிருக்கும் கரடி இரவு நேரத்தில் உணவு தேடி குடியிருப்பு மற்றும் கடைவீதிகளில் நடமாடுவது வாடிக்கையாக இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பஜார் பகுதியில் திலிப்குமார் என்பவரது கடையை தொடர்ந்து 4 முறை உடைத்து உள்ளே சென்ற கரடி அங்கிருந்த சமையல் எண்ணை பாக்கெட்டுகள், முட்டைகளை உடைத்து குடித்ததுடன் பொருட்களையும் சூறையாடி சென்றது.

இதேபோல் மஞ்சூர் மேல் பஜார் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளியின் சமையல் கூட கதவை உடைத்த கரடி அங்கிருந்த எண்ணையை குடித்தபின் பொருட்களையும் கீழே தள்ளிவிட்டு சென்றது. கண்டி பகுதியில் சசிகுமார் என்பவரது கடையில் 2  முறை கரடி உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை நாசம் செய்தது. மஞ்சூர் பகுதியில் தொடர்ந்து கரடி அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் பீதியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.  இதை தொடர்ந்து அட்டகாச கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அனைத்து கடைக்காரர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.

இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக வனப் பாதுகாவலர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்காராம் போஸ்லே ஆகியோர் உத்தரவின் பேரில் குந்தா ரேஞ்சர் சீனிவாசன் தலைமையில் வனத்துறையினர் நடவடிக்கையில் இறங்கினர். கரடியை பிடிப்பதற்காக மஞ்சூர் பஜார் பகுதியில் உள்ள குப்பை தொட்டி அருகே கூண்டு வைக்கப்பட்டது. கரடிக்கு பிடித்தமான எண்ணை மற்றும் பலாப்பழம் மற்றும் உணவு பொருட்களை கூண்டில் வைத்தனர். தொடர்ந்து கடந்த 7 நாட்களாக இரவு நேரத்தில் கரடி நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

ஆனால் கரடி கூண்டுக்குள் சிக்காமல் போக்கு காட்டி வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் அப்பகுதியில் உலா வந்த கரடி பலாப்பழத்தின் வாசனையை நுகர்ந்தபடி கூண்டுக்குள் சென்றது.  மறுநிமிடமே கதவுகள் அடைத்ததால் கரடி வசமாக கூண்டுக்குள் சிக்கியது. இதைத்தொடர்ந்து குந்தா ரேஞ்சர் சீனிவாசன் தலைமையில் வனவர் சுரேஷ்குமார், வனக்காப்பாளர் தர்மராஜ் மற்றும் வனத்துறையினர் கூண்டை  வாகனத்தில் ஏற்றினர். பின்னர் முக்குருத்தி தேசிய பூங்கா பங்கிதபால் வனப்பகுதிக்கு கொண்டு சென்று கரடியை விடுவித்தனர். நீண்ட நாட்களாக மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த கரடி பிடிக்கப்பட்டதால் நிம்மதி அடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories: