அதிமுக ஆட்சியில் ‘எல்லாமே’ ஆமை வேகம்... சாலை விரிவாக்கம், பாலப் பணிகள் ‘படு ஸ்பீடு’- தமிழக அரசிற்கு சின்னமனூர் மக்கள் பாராட்டு

சின்னமனூர்: தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளுடன் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள சின்னமனூர், வருசநாடு, மேகமலை போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. ஆனால், திமுக ஆட்சியில் மலைக்கிராம மக்கள் நலன்கருதி அறிமுகப்படுத்தப்பட்ட, ஏராளமான திட்டங்களை அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறுத்தி வைத்தனர். அதனால், பல கிராமங்கள் அடிப்படை வசதியின்றி தத்தளித்து கொண்டிருக்கின்றன.

கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்முறை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பதவியேற்ற காலகட்டம் தமிழகம் பெரும் தள்ளாட்டத்தில் இருந்தது. கொரோனா பெருந்தொற்று, பருவமழை பாதிப்புகள், நிதிச்சுமை என நெருக்கடிகள் அடுத்தடுத்து வந்தன. அவற்றே செம்மையாக ஒருபக்கம் கையாண்டு கொண்டே, மறுபுறம் மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தினார். அதுவும் முதல் நாளில் இருந்தே களப்பணியை தொடங்கி விட்டார். அவற்றில் பெண்கள் மேம்பாட்டிற்காக செய்த விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இதில் பல்வேறு திட்டங்கள் நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது. தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சாலை விரிவாக்க பணிகள், ேமம்பால பணிகள், பாதாள சாக்கடை பணிகள், வாறுகால் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் இருந்ததாகவும், தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சியில் சென்னை மட்டுமல்ல, தமிழ்நாட்டையே சீரழித்துள்ளனர். அதை சீராக்கவே பல ஆண்டுகள் ஆகும். ஒன்றரை ஆண்டுகளில் சரி செய்து விடுவோம் என நம்புகிறோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள சாலைகளை, பாலங்களை பராமரித்து சீரமைக்க அதிகாரிகள் தவறி விட்டனர். இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. தேனி மாவட்டத்தில் புதிய சாலை பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக ஒதுக்கிய நிதியில் பணிகள் எதுவும் முழுமையாக செய்யாமல் கடந்த அதிமுக ஆட்சியில் பலகோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சி பகுதியில் இருந்து குச்சனூர்-சங்கராபுரம் இணைப்பு சாலை போடி மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. அதிலும், இந்த சாலையில் இருபுறமும் தேக்கு, தென்னை, காய்கறிகள் மரிக் கொழுந்து என பலவகையான விவசாய பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்தச் சாலை குறுகியதாக இருப்பதால் விவசாய வாகனங்களும் சின்னமனூர், குச்சனூர், தேவாரம் ,கோம்பை , போடி போன்ற பகுதிகளில் இருந்து வருபவர்கள் இந்த இணைப்பு சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் போடியிலிருந்து இந்த இணைப்புச் சாலை வழியாக குச்சனூர் சுயம்பு சனிஸ்வர பகவான் கோயிலுக்கு சிறப்பு பஸ்களில் பக்தர்கள் சென்று வருகின்றனர். இதனால், போக்குவரத்து அதிகமுள்ள இந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி சங்கராபுரத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்திற்கு விரிவாக்கம் செய்து அகன்ற பாலம் அமைக்கப்பட்டது.

மீதமுள்ள 4 கிலோ மீட்டர் தூர குறுகிய சாலையில் 6 மாதத்திற்கு முன்பாக இருபுறமும் விரிவாக்கம் செய்து, இடையில் உள்ள 3 ஓடைப்பகுதியில் இருந்த குறுகிய 3 பாலங்களை இடித்து அகற்றி விட்டு புதிய பாலங்கள் அமைக்கும் பணிகள் நடப்பதாக இருந்தது. ஆனால், பணிகள் துவங்கப்படாமல் கிடப்பல் கிடந்தது. இதுகுறித்து தினகரன் நாளிதழிலில் விரிவான செய்தி வெளியானது. அதன்பின் கடந்த 2 வாரமாக முடங்கி கிடந்த பாலங்கள் கட்டுமான பணிகள் ஜரூராக நடந்து வருகிறது.

இப்பணிகளை நேற்று தேனி மாவட்ட கோட்ட பொறியாளர் ரமேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்து தாமாக கட்ட வேண்டும் என ஆலோசனை வழங்கினார். அப்போது போடி உதவி கோட்ட பொறியாளர் தங்கராஜ், பொறியாளர் நதிஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தினகரன் செய்தி எதிரொலியால், முடங்கி கிடந்த 3 பாலங்கள் கட்டுமான பணிகள் துவங்கியதால் தமிழக அரசிற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.

Related Stories: