நேபாள பிரதமர் தேவ்பா 7வது முறையாக வெற்றி: தொங்கு நாடாளுமன்றத்துக்கு வாய்ப்பு

காத்மாண்டு: நேபாள தேர்தலில் நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பா தொடர்ந்து 7-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இதில், ஆளும் நேபாள காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நேபாளத்தில் கடந்த 20ம் தேதி நாடாளுமன்றத்துக்கும், 7 மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது. அடுத்த நாள் வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின. நாடாளுமன்றத்தில் உள்ள 275 உறுப்பினர்களில் 165 பேர் நேரடியாக வாக்கு எண்ணிக்கை மூலமும், மற்றவர்கள் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 550 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவைகளில் 330 பேர் நேரடியாகவும், 220 பேர் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  ஆளும் நேபாள காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணிக்கும், முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள சிபிஎன் (யுஎம்எல்) கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பா, தெல்துரா தொகுதியில்  25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 7 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். இதுவரை 13 இடங்களை கைப்பற்றி உள்ள ஆளும் நேபாள காங்கிரஸ், 54 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதன் கூட்டணி கட்சிகள் சிபிஎன் (மாவோயிஸ்ட்), சிபிஎன் (ஒன்றுபட்ட சோசலிஸ்ட்) கட்சி, லோக்தந்திரிக் சமாஜ்வாடி கட்சிகள் 27 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. கேபி. சர்மா ஒலி தலைமையிலான  சிபிஎன் (யுஎம்எல்) கட்சி 3 இடங்களை கைப்பற்றி உள்ளது. மேலும் 45 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதன் கூட்டணி கட்சிகள் 10 இடங்களில் முன்னிலையில்  உள்ளன. கடந்த 2006ல் இருந்து நேபாளத்தில் எந்தவொரு பிரதமரும் முழு பதவிக்காலம் பணியாற்றவில்லை. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு நாடாளுமன்றம் அமையும் என கூறப்படுகிறது.

Related Stories: