இயற்கை விவசாயம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்-மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுரை

ஊட்டி : விவசாயிகளுக்கு  இயற்கை விவசாயம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என  மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

நீலகிரி மாவட்ட  ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் வளர்ச்சி மற்றும் திட்ட பணிகளின்  முன்னேற்றம் குறித்து அனைத்து அரசு துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்  நடந்தது.

கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு  அலுவலர் மற்றும் போக்குவரத்துத்துறை அரசு சிறப்பு செயலாளர் வெங்கடேஷ் தலைமை  வகித்தார்.

கூட்டத்தில், தோட்டக்கலை, வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி  மற்றும் உள்ளாட்சித்துறை, நகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால்  வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, பள்ளிக்கல்வித்துறை  மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஒருங்கிணைந்த  குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் சமூக நலத்துறை போன்ற  துறைகளின் மூலம்  நடக்கும்  வளர்ச்சி மற்றும் திட்ட பணிகளின் முன்னேற்றம்  குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது மாவட்ட கண்காணிப்பு  அலுவலர் வெங்கடேஷ் பேசியதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாதம் ஒரு முறை  நேரிடையாக தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாவட்டத்திற்கு சென்று,  அங்கு நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை நேரிடையாக கள ஆய்வு மேற்கொள்ள  உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில் நேற்றைய தினம் (நேற்று முன்தினம்)  கோத்தகிரி வட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் மற்றும்  முடிவுற்ற திட்டப்பணிகளை கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இன்றைய தினம்  (நேற்று) மாவட்ட அலுவலர்களுடன் வளர்ச்சி மற்றும் திட்ட  பணிகளின்  முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.

நீலகிரி  மாவட்டத்திலுள்ள தோட்டக்கலைத்துறையின் மூலம், விவசாயிகளுக்கு இயற்கை  விவசாயம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கலைஞரின்  அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், கலைஞரின் நகர்ப்புற  மேம்பாட்டு திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ்  நடைபெற்று வரும் பணிகளை விரைவுப்படுத்திட வேண்டும்.

அதேபோல்  நகராட்சித்துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை  விரைவுபடுத்துவதோடு, சுவச்பாரத் மிஷன் மற்றும் அம்ருத் திட்டத்தின் கீழ்  பணிகளை எடுத்து மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டும். பிரதம  மந்திரியின் ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளில்  பயனாளிகளின் பெயர் மற்றும் அரசு சின்னம்  இல்லாத வீடுகளில் சின்னம் பதிக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடகிழக்கு பருவ மழையினை முன்னிட்டு  கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தாழ்வான  பகுதிகளில் மண்டல அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அனைத்து  வருவாய் கோட்டாட்சியர் அலுவலர்களும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதல்நிலை  மீட்பாளர்கள் கைப்பேசி எண்கள் உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதனைய  கள ஆய்வு செய்து அவர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நகராட்சி மற்றும்  பேரூராட்சி,  ஊராட்சி பகுதிகளில் கொசு உற்பத்தியை தடுக்க மருந்து  தெளிக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து  கண்காணிப்பதோடு, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருந்துகள்  இருப்பு உள்ளதா? என உறுதி செய்ய வேண்டும்.

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்  உள்ள நோயாளிகளை கண்டறிந்து சுகாதாரப் பணியாளர்கள் மூலம் இல்லங்களுக்கு  சென்று மருந்து பெட்டகங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசி  முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.

பேரூராட்சி மற்றும் நகராட்சி  சார்பில் மார்கெட் பகுதிகளில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்த  நடவடிக்கை  எடுக்க வேண்டும். சாலை ஓரங்களில் குப்பைகள் இல்லாதவாறு உள்ளாட்சி துறை  அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும், பள்ளிக்கல்வித்துறை  மூலம்  இல்லம் தேடி கல்வி மற்றும் எண்ணும் எழுத்தும் இயக்கம் சிறப்பான  முறையில் மேற்கொள்ளப்படுகிறதா ? என்பதனை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி  அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

நான் முதல்வன் திட்டம் குறித்து  போதிய விழிப்புணர்வு மாணவ, மாணவிகளிடம் ஏற்படுத்த வேண்டும். உங்கள்  தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பொது மக்களிடமிருந்து பெறப்படும்  மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தனிகவனம் செலுத்தி உடன் நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும். அதேபோல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில்  கிராமங்களின் வளர்ச்சிக்காக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்  கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் எடை குறைவான  குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கி, அங்கன்வாடி மையத்திற்கு வரும்  குழந்தைகளை அங்கன்வாடி பணியாளர்கள் கண்காணிக்க வேண்டும். காவல்துறை, மாவட்ட  சமூக நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை ஆகிய துறை  அலுவலர்கள் மூலம் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் குழந்தை திருமணம்  தடுப்பதற்காக முகாம்கள் நடத்தியும், போக்சோ சட்டம் குறித்தும் அவர்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அரசின் திட்டங்கள் அனைத்தும்  பொதுமக்களுக்கு  சென்று சேருவதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உறுதி செய்ய  வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி  பிரியதர்சினி, வருவாய் கோட்டாட்சியர்கள் துரைசாமி, பூஷணகுமார், முகம்மது  குதுரதுல்லா,  தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலாமேரி,  துணை இயக்குநர்  (சுகாதார பணிகள்) உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Related Stories: