வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி லட்சிவாக்கம் கிராம மக்கள் 2வது நாளாக போராட்டம்

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே லட்சிவாக்கம் ஊராட்சி காலணி பகுதியில்  180க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும் என்று கடந்த 2008ம் ஆண்டு திருவள்ளூர்  கலெக்டர் அலுவலகத்திலும் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.  கடந்த அக்டோபர் 2ம் தேதி காந்திஜெயந்தி அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் மனு அளித்தனர். ஆனால் இதுவரை பட்டா வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த லட்சிவாக்கம் காலனி மக்கள் கடந்த மாதம்  லட்சிவாக்கம் செங்காளம்மன் கோயில் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊத்துக்கோட்டை தாசில்தார் அருண்குமார்,  பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘’ அரசு நிலத்தை அளவீடு செய்து பட்டா கொடுங்கள்’ என்றனர். இதை கேட்ட  அதிகாரிகள், ‘’20 நாட்கள் அவகாசம் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்றனர். ஆனால் ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த மக்கள், நேற்று மீண்டும் செங்காளம்மன் கோயில் அருகில் போராட்டம் துவங்கினர்.

அப்போது அவர்கள், பட்டா வழங்கும்வரை போராட்டம் நடத்தப்படும்’ என்று அறிவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் வக்கீல் ஜீவா தலைமையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஊத்துக்கோட்டை தாசில்தார் அருண்குமார், இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு எட்டப்படாததால் இன்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் திருவள்ளூர் மாவட்ட சப் - கலெக்டர் வருகைக்காக காத்திருக்கிறார்கள். இதன்காரணமாக லட்சிவாக்கம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Related Stories: